பண்ணாரி குண்டம் விழா: மறுபூஜையுடன் நிறைவு
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலின், இந்த ஆண்டு குண்டம் திருவிழா நேற்று மறுபூஜையுடன் நிறைவுற்றது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் அடுத்து வரும் செவ்வாய்கிழமை குண்டம் விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு குண்டம் விழா, மார்ச், 11ம் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையடுத்து நித்தியப்படி பூஜை முடிந்து பண்ணாரி அம்மன் சப்பரத்தில் வீதியுலாவுக்காக சிக்கரசம்பாளையம் சென்றது.பின் வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம் வழியாக இரவு தொட்டம்பாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பண்ணாரி மாரியம்மன் சப்பரத்தில் வீதிஉலா சென்றது.வீதிஉலா முடிந்து பண்ணாரி கோவிலை அடைந்த பின், கம்பம் நடும் விழா நடந்தது.இதையடுத்து பண்ணாரி மாரியம்மன் குண்டம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் தீ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி கடந்த, 26ம் தேதி நடந்தது. இதில் தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து, தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.கடந்த வெள்ளிக்கிழமை பண்ணாரி மாரியம்மன் கோவிலில் விளங்கு பூஜை நடந்தது. நேற்று இந்தாண்டின் குண்டம் விழாவின் இறுதி நிகழ்ச்சியான மறுபூஜை நடந்தது.நேற்று காலை ஆறு மணி முதல் பண்ணாரி மாரிம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் வரத்துவங்கியது. நேற்று மதியம் கோவிலை சுற்றிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.பின், குண்டம் நடந்த இடம் சென்று, உப்பு வாங்கி இட்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலை சுற்றிலும் சப்பரத்தில் அம்மன் உலா சென்றார். மேலும் வேல் எடுத்து கோவிலை சுற்றியும், தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்தனர்.பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள், சத்தியமங்கலத்தில் இருந்து கோவில் வரை இயக்கப்பட்டது.ஈரோடு எஸ்.பி., பொன்னி தலைமையில், சத்தியமங்கலம் டி.எஸ்.பி., முத்து மாணிக்கம் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.