பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி!
திருப்புத்தூர்: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நேற்று காலை தீர்த்தவாரி நடந்தது.அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, தங்கக் கவசத்தில் அருள்பாலித்த கற்பகவிநாயகரை பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் கோயில் குளத்தில் அங்குச்தேவர் மற்றும் சண்டிகேஸ்வரருக்கும் தீர்த்தவாரி நடந்தது.வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவர் உட் பிரகாரத்தில் வலம் வந்தார். மாலையில் சுக்ல சதுர்த்தியில் பிறந்துள்ள விஜய ஆண்டிற்கானபஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கௌரி சந்திரசேகர சுவாமிகள் ரிஷப வாகனத்தில் வலம் வந்தார்.தேவகோட்டை: தேவகோட்டை நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கலங்காது கண்ட விநாயகர் கோயில், கருத்தாவூரணி கைலாசவிநாயகர் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில், ஆதி சங்கரர் கோயில், ஜெயங்கொண்ட விநாயகர் கோயில், கற்பக விநாயகர் கோயில், உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், நடந்தன. சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில்,சிறப்பு அபிஷேகம், விளக்கு பூஜை நடந்தது. தலைமையாசிரியர் சீனிவாசன் சொற்பொழி நடந்தது.ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி மகேந்திரன், பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர். இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு விழா நடந்தது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், அதிக வருமானமுள்ள கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டு விழா கொண்டாட அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதன்படி, தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று புத்தாண்டு விழா நடந்தது. அதிகாலை 5.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு, அம்மன் வெள்ளி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். திருப்புவனம்: மடப்புரம் காளிகோயிலில்,நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மதியம் நடந்த அன்னதானத்தை, மாவட்ட ஊராட்சி தலைவர் சிவதேவ்குமார் துவக்கி வைத்தார். திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, அறங்காவலர் குழு தலைவர் ராஜாங்கம், அறங்காவலர்கள் கல்யாணசுந்தரம், சுரேஷ், செல்லம், சுதா, பணியாளர்கள் செய்திருந்தனர். திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி கோயில், மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கிராமங்களில் உள்ள குலதெய்வ கோயில்களிலும் வழிபாடு நடந்தது.சிங்கம்புணரி: சிங்கம்புணரியில்,தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.குபேர கணபதிகோயிலில் சொக்கலிங்கேஷ்வரராவ் தலைமையில், உலக ஷேம,யாகம் நடந்தது. ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மூலவருக்கு சகலதிரவிய அபிஷேகம், பதினெட்டுப்படி பூஜை நடந்தது. சுகந்தரும் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை,ஆராதனை, பட்டிமன்றம் நடந்தது.