பழமையான கல்திட்டைகள் பழநி அருகே கண்டுபிடிப்பு!
பழநி: பழநி அருகே பொட்டம்பட்டியில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, பழங்கால கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழநியைச் சேர்ந்த, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையிலான குழுவினர், கணக்கன்பட்டி பகுதியில், வரலாற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பொட்டம்பட்டியைச் சேர்ந்த குப்புசாமி தோட்டத்தில், இரண்டு கல்திட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.நாராயணமூர்த்தி கூறியதாவது: சங்ககாலத்தில் இறந்தவர்களை, புதைத்து, பெரிய பாறாங்கற்களை கொண்டு, கல்திட்டு அமைப்பது வழக்கம். பெருங்கற் காலத்தைச் சேர்ந்த இந்த முறை, தென்னிந்தியா முழுவதும், காணப்படுகிறது. கிராம மக்கள், இந்த அமைப்பை, குள்ள மனிதர்கள் வாழ்ந்த வீடுகள் எனக்கூறுவர். பொட்டம்பட்டிலுள்ள, பட்டிக்குளத்தின் அருகே கிடைத்துள்ள இந்த கல்திட்டைகளைச் சுற்றி பழங்கால ஓடுகள் சிதறிக்கிடந்தன. அவற்றின் மேல் நகக்குறி, நெற்கதிர்வடிவங்கள் உள்ளது. உடைந்த பானையில் "த என்னும் தமிழ் பிரமி எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இரும்பை உருக்க பயன்படுத்திய, இரும்பு தாதுக்கள், சுண்ணாம்பு கற்கள், குவளைகள் கிடைத்துள்ளது, என்றார்.