சூடிக்கொடுத்த சுடர்கொடி!
திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே என்று போற்றப்படுபவள் ஆண்டாள். மானிடர்களுக்கு தன்னை மணம் முடித்துக் கொடுத்தால் பூமியில் வாழமாட்டேன் என்று கண்ணனுக்காக தன் இன்னுயிரையும் தர காத்திருந்தவள். பெருமாளுக்காக தொடுத்த மாலையை கழுத்தில் சூடி கண்ணாடியில் அழகுபார்ப்பது இவளது வழக்கம். ஒருமுறை இதைப் பார்த்துவிட்ட ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார் வேறொரு மாலையைத் தொடுத்து பெருமாளுக்குச் சூட்டினார். ஆனால், கனவில் தோன்றிய பெருமாள் ஆண்டாள் சூடிய மாலையே எனக்கு பிரியமானது என்று தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், இப்போதும் ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மாலையே பெருமாளுக்கு சூட்டப்படுகிறது. இவள் பெருமாளைக் குறித்து பாடிய திருப்பாவை யும், வாரணமாயிரமும் பிரசித்தி பெற்றவை. இவற்றை ஆடிப்பூரத் தன்று (ஆகஸ்ட் 2) படிப்போருக்கு நிறைவான மணவாழ்வும், மழலைப் பேறும் வாய்க்கும் என்பது ஐதீகம்.