கோவில் பூசாரிகள் மாநாடு!
சென்னை: கோவில் பூசாரிகள் மாநாடு, சென்னையில், நாளை நடக்கிறது. கோவில் பூசாரிகள் நலச்சங்க தலைவர், வாசு கூறியதாவது: தமிழகம் முழுக்க, 6 லட்சம் கிராம கோவில் பூசாரிகள் உள்ளனர். இவர்கள், ஆண்டுக்கு, இரண்டு முறை தமிழகத்தில் உள்ள, பெரிய கோவிலுக்கு வழிபட குடும்பத்துடன் சென்றால், அவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல், சிறப்பு தரிசனம் செய்ய, ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசு, புனித யாத்திரை செல்வதற்கு, அரசு மானியம் ஒதுக்கி உள்ளதைப் போல், ஆண்டுக்கு, 50 பூசாரிகள், புனித யாத்திரை செல்ல, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கோவில் பூசாரி இறந்தால், வழங்கப்படும் உதவித் தொகையை பெற, கோவில் பூசாரி, கோவிலில், இறந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இக்கடுமையான விதிமுறையை மாற்ற வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை, 27ம் தேதி, சென்னை வேளச்சேரி, அம்மா திருமண மண்டபத்தில், பூசாரிகளின் மாநாடு நடக்க உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.