உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுமுகையில் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்

சிறுமுகையில் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் பழைய ஐயப்பன் கோவிலை இடித்து விட்டு, 18 படிகளுடன் கூடிய புதிய ஐயப்பன் கோவில் கட்டப்பட்டது. இதன் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. கலசாபிஷேகம், அத்தாழ பூஜை, அதிவாஸ ஹோமம், தாயம் பகா, சயன பூஜை, பீடம், பிம்ப பிரதிஷ்டை ஆகியவை நடந்தன. நேற்று காலை 6.30 லிருந்து 7.30 மணி வரை, ஐயப்பனை வளர்த்த பந்தள மகாராஜா பரம்பரை வாரிசுகளை சேர்ந்த ராமவர்ம ராஜா, கோதவர்ம ராஜா முன்னிலையில், கேரள மாநிலம் கர்க்காடு சக்ரதந்திரி பிரம்ம தேவானந்தன் நம்பூதிரி திருமேனி தலைமையில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. சந்திரமவுலி சுவாமி, ரகோத்தம ராவ் குருசாமி, சண்முகசுந்தரம் குருசாமி, ஜெகதீசன் குருசாமி ஆகியோர் அருளுரை வழங்கினர். சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், எம்.எல்.ஏ., சின்னராஜ், காரமடை ஒன்றிய சேர்மன் ராஜ்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழு தலைவர் ஞானசேகரன், செயலாளர் தேவராஜ், பொருளாளர் முருகவேல், துணைத்தலைவர் கண்ணன் மற்றும் எலகம்பாளையம் ஐயப்பன் கோவில் பொதுநலச் சங்கத்தினர் ஆகியோர் செய்திருந்தனர். இன்று காலை 8.00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், மாலை 3.00 மணிக்கு யானை மீது ஐயப்பன் சுவாமி ஊர்வலமும் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !