உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி மலைப்பாதையில் வேக கட்டுப்பாட்டு: பக்தர்கள் கடும் எதிர்ப்பு!

திருப்பதி மலைப்பாதையில் வேக கட்டுப்பாட்டு: பக்தர்கள் கடும் எதிர்ப்பு!

திருப்பதி: திருமலை, மலைப்பாதையில், விபத்துக்களை தடுக்க, தேவஸ்தானம் அறிமுகப்படுத்திய புதிய நடைமுறை பக்தர்களை பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளது. திருமலை, மலைப்பாதையில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இதை தடுக்க, மலைப்பாதையில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும், வேக கட்டுபாட்டு அளவை நிர்ணயித்து, அதற்கான சீட்டுகளை, தேவஸ்தானம் வழங்கி வருகிறது. அதன்படி, திருமலையில் இருந்து திருப்பதி செல்பவர்கள், 35 நிமிடங்களுக்கு முன் சென்றால், தண்டனைக்கு உள்ளாவர். திருமலையில் இருந்து திருப்பதிக்கு, 40 நிமிடங்களுக்கு முன் செல்ல கூடாது. அதற்கு ஏற்றவாறு, சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன. திருப்பதி, அலிபிரி சோதனைச் சாவடியில் அகலமான சாலை உள்ளது. வேக கட்டுப்பாடு சீட்டுக்கள் வழங்க, ஏழு மையங்கள் உள்ளன. மேலும், இரு சக்கர, கார்கள், பேருந்துகள் என தனித்தனியாக வரிசைகள் உள்ளன. 50 பாதுகாப்பு அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், திருப்பதிக்கு சென்று திரும்பி வரும் வழியில், கருடாத்ரி நகர் சோதனைச் சாவடியில், இரண்டு பணியாளர்களைக் கொண்ட, ஒரே ஒரு மையம் மட்டுமே உள்ளது. மேலும், திருமலையில் இருந்து இறங்கும் வழியில் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. திருமலைக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும், திருப்பதிக்கு சென்றாக வேண்டும். அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், குறுகலான சாலையில் நீண்ட தூரம் வாகனங்கள் அப்படியே நிறுத்தி வைக்கப்படுகின்றன. பக்தர்கள் இதனால் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கான பேருந்து மற்றும் ரயிலை தவற விடுகின்றனர். இவ்வாறு வேக கட்டுப்பாடு விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டாலும், கடந்த, ஞாயிற்றுக் கிழமை, மலைப்பாதையில் மீண்டும் விபத்து ஏற்பட்டது. மேலும், இந்த நடைமுறையை தொடங்கிய, இரண்டாவது நாளே, கம்ப்யூட்டர்கள் பழுதானதால், 2 கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பக்தர்கள் யோசனை: வேக கட்டுப்பாடு நடைமுறைக்கு பதில், தேவஸ்தானத்தின் தற்காலிக பணியாளர்களை, மலைப் பாதையின் ஒவ்வொரு அல்லது, இரண்டு வளைவுகளுக்கு ஒருவரை கண்காணிப்புப் பணியில் நியமித்தால், ஓட்டுநர்களும் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை ஓட்டுவர். வேகமாக செல்லும் வாகனங்களின் எண்ணை குறித்துக் கொண்டு, அவர்களை தண்டிக்கவும் முடியும். இந்த நடைமுறை தேவஸ்தானத்திற்கு புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும், பிரம்மோற்சவத்தின், கருட சேவை நாளன்று, மலைப்பாதையில், பாதுகாப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். அதுபோல் தினமும் செய்தால், யாருக்கும் எந்த சிரமும் இருக்காது; மலைப்பாதையில் விபத்துக்களும் குறையும் என்று பக்தர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

திருமலையில் கனமழை: திருமலையில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த, இரண்டு நாட்களாக, திருமலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மதியம், இரண்டு மணி நேரம் விடாமல், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், திருமலை முழுவதும் மழை நீரில் மூழ்கியது.

முழங்கால் அளவு: திவ்ய தரிசனம் பக்தர்கள் வரிசையில், மழை நீர், முழங்கால் அளவு தேங்கியது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், வைகுண்டம் பகுதியை தாண்டி, ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தனர். மேலும், ஏழுமலையான் தரிசனம் முடிந்து வெளியே வந்த பக்தர்கள், தங்கள் அறைகளுக்கு செல்ல முடியாமல், தவித்தனர். வெகு நேரம் மழை பெய்ததால், திருமலையில் கடும் குளிர் நிலவியது; மின் தடையும் ஏற்பட்டது. ஏழுமலையான் கோவில் முன் வாசலில் தேங்கிய மழை நீரை, தீயணைப்பு படையினர் அகற்றினர். இன்னும், இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால், பக்தர்கள், தேவையான முன்னேற்பாட்டுடன் வர வேண்டும் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !