உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூவர் கண்டியம்மன் கோவிலில் திருவீதியுலா

மூவர் கண்டியம்மன் கோவிலில் திருவீதியுலா

உடுமலை: உடுமலை அருகே பழமை வாய்ந்த அம்மன் கோவிலில், 300 ஆண்டுகளுக்கு பிறகு அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி நடந்தது. இதில், சுற்றுப்பகுதி யை சேர்ந்த கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். உடுமலை அருகேயுள்ள சோமவாரப்பட்டி கிராமத்தில், பழமை வாய்ந்த மூவர் கண்டியம்மன் கோவில் உள்ளது. பெருங்கற்காலத்தை சேர்ந்த பல்வேறு தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள இப்பகுதி சோமவார பட்டணம் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஒரே கடவுள்; இரண்டு கருவறை என்பது கோவிலின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. கோவில் கட்டப்பட்ட போது அமைக்கப்பட்ட கருவறையில் இருந்த கண்டியம்மன் சிலை சேதப்படுத்தப்பட்ட நிலையில், அச்சிலை அகற்றப்படாமல், புதிதாக மற்றொரு கருவறையும், அம்மன் சிலையும் வைக்கப்பட்டது. இதனால், ஒரே கடவுள்; இரண்டு கருவறை என்ற சிறப்பம்சம் இக்கோவிலுக்கு உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாததால், கோவில் விமான கலசங்கள் காணாமல் போயின. திருவீதியுலா உட்பட சிறப்பு பூஜைகளும் தடைபட்டு, ஒரு கால பூஜை மட்டும் இக்கோவிலில் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தடைபட்டிருந்த சிறப்பு பூஜைகளை மீண்டும் துவக்கவும், கோவில் விமானங்களில் கலசம் பொருத்துதல் உட்பட புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் சுந்தரேசன் மற்றும் கஞ்சிமலை ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஒரு மாதமாக பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டு, நேற்று முன்தினம் மாலை கண்டியம்மன் கோவிலில், கலசங்கள் பொருத்தி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மாலை 03:00 மணிக்கு அம்மாபட்டி கிராம குழுவினரின் தேவராட்ட நிகழ்ச்சியுடன் யானை மற்றும் குதிரை வாகனத்தில், அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி துவங்கி நடந்தது. 300 ஆண்டுகளாக தடை பட்டிருந்த அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி மீண்டும் நடந்ததால், சுற்றுப்பகுதியைச்சேர்ந்த கிராம மக்கள் திரளாக பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !