செல்வ விநாயகர் கோவிலில் வெள்ளிக்கவசம் சாற்றுபடி விழா
நாமக்கல்: சந்தைப்பேட்டைபுதூர் செல்வ விநாயகர் கோவிலில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக்கசவம் சாற்றுபடி, நேற்று கோலாகலமாக நடந்தது. நாமக்கல், சந்தைப்பேட்டைபுதூரில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், பாலமுருகன் ஆகிய ஸ்வாமிகள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில், முக்கிய தினங்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. இந்நிலையில், செல்வ விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் மற்றும் பாலமுருகன் ஆகிய ஸ்வாமிகளுக்கு, வெள்ளிக் கவசம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பக்தர்கள் வழங்கிய நன்கொடை மூலம், பல லட்சம் ரூபாய் மதிப்பில், வெள்ளிக்கவசம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, நேற்று, வெள்ளிக்கவசம் சாற்றுபடி விழா, கோலாகலமாக நடந்தது. அதிகாலை, 3 மணிக்கு, கணபதி ஹோமம், அஸ்திர ஹோமம், அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. 4.30 மணிக்கு, பூர்ணாகுதி, 5.30 மணிக்கு, வெள்ளிக் கவசம், கோவிலை வலம் வந்தது. காலை, 6 மணிக்கு, வெள்ளிக்கவசம் சாற்றுபடி நடந்தது. 6.30 மணிக்கு, அலங்கார பூஜை, 7.15 மணிக்கு, மகா தீபாரதனை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.