மழைக்காக வினோத பிரார்த்தனை: வருண பகவானின் உருவ பொம்மை எரிப்பு!
காஞ்சிபுரம்: பெரும்பாக்கம் கிராம மக்கள், மழை வேண்டி, வருண பகவானின் உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு செய்தனர். காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. பருவ மழை இல்லாததால், ஏரி பாசனத்தை நம்பி இருந்த விளை நிலங்கள், வறண்டு கிடக்கிறது. பம்பு செட் பாசனம் மூலம் பயிரிடப்பட்ட, நெற்பயிர்கள் தற்போது நிலத்தடிநீர் குறைந்து போனதால், கதிர்விடும் நேரத்தில் கருகி போனது.
இறுதி சடங்கு: இதனால், செய்வதறியாமல் தவிர்த்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள், நேற்று உச்சிவெயிலில் ஒன்றுகூடி, வருண பகவான் உருவ பொம்மைக்கு பாடை கட்டி, இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, மாரியம்மன் கோவில் தெருவில், வருண பகவானின் உருவ பொம்மை செய்து, அதை கட்டிலில் படுக்க வைத்தனர். பின், மாலை அணிவித்து கிராம மக்கள், "பாவி வானம் இடிந்து விழ வேண்டும் என, ஒப்பாரியில் ஈடுப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாடை கட்டி, மாட்டு வண்டியில் உருவ பொம்மையை ஏற்றிக் கொண்டு, மேள தாளத்துடன் அனைத்து தெருக்கள் வழியாக, ஊர்வலமாக எடுத்து சென்றனர். முறைப்படி கொள்ளி சட்டியும் எடுத்து செல்லப்பட்டது. ராகு காலத்திற்கு முன்னதாக, மாலை 4:00 மணிக்கு, சுடுகாட்டிற்கு சென்று தீயிட்டு இறுதி சடங்கை செய்தனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். எட்டாம் நாளான வரும் ஞாயிற்றுக் கிழமை, வருண பகவானுக்கு காரியம் செய்ய கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டது.
ஐதீகம்: சுடுகாட்டிற்கு பிணத்தை எடுத்து செல்லும் இதுபோன்ற சடங்கை நிறைவேற்றினால், ஓரிரு தினங்களில் மழை பெய்யும் என, பெரும்பாக்கம் கிராம மக்களின் ஐதீகமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், இதேபோல் சடங்கு நடத்தப்பட்டது, அப்போது இரண்டாவது நாளில் மழை பெய்தது என, கிராம மக்கள் கூறினர்.