உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் கோவில் கண்டுபிடிப்பு!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் கோவில் கண்டுபிடிப்பு!

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவபெருமான் கோவில், ஆற்காட்டை அடுத்த, அரும்பாக்கம் என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுகளில், பல்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் இருந்து, கண்ணமங்கலம் செல்லும் சாலையில், 8 கி.மீ., தொலைவில் உள்ளது, அரும்பாக்கம் கிராமம். இந்த ஊரின் ஒரு பகுதியில், மலை உள்ளது. அதன் சரிவுகளில், சில ஆண்டுகளுக்கு முன், லிங்கம், சண்டிகேஸ்வரர், பின்னமான சப்த மாதர்கள் சிலைகள் கிடைத்தன. இந்த ஊரில் பிறந்த, எலும்புநோய் வல்லுனர், சந்திரசேகரன் என்பவர், சிலைகளை சேகரித்து, மலை மேல் சிவனுக்கும், முருகனுக்கும் கோவில் எழுப்பினார். மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு கிடைத்த லிங்கம், காஞ்சிபுரம், மாமல்லபுரம் ஆகிய இடங்களை ஆண்ட பல்லவ மன்னன் ராஜசிம்மனின் படைப்பு போல் உள்ளது. ஆதலால், இந்த ஊர், 700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறந்து விளங்கியது, வரலாற்று ஆவணங்களால் தெரிய வருகிறது.

சூரியன் சிலை: ஓராண்டுக்கு முன், இம்மலையின் அருகில் உள்ள வயலில், ஆறு அடிக்கும் மேல் உயரமான, எழில் வாய்ந்த சூரியன் சிலை கிடைத்தது. அதற்கும் ஒரு கோவில் எழுப்பி, பிரதிஷ்டை செய்து, அதுவும் தற்போது வழிபாட்டில் உள்ளது. இக்கோவிலை ஆய்வு செய்ய, தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர், நாகசாமி, வரதராஜன் ஆகியோர், அப்பகுதிக்குச் சென்றனர். அங்குள்ள தென்னந்தோப்பு மேட்டில், மூன்று கருங்கற்கள் காணப்பட்டன. அவற்றைப் புரட்டிப் பார்த்த போது, தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டின் துண்டுகள் என, தெரியவந்தது. அது, கோவிலின், திட்டான பகுதியாக இருந்துள்ளது. "சகரை யாண்டு எண்ணூற்று எழுபது என்று அதில், எழுதப்பட்டு உள்ளது. அடுத்த இரண்டு வரியில், "நாற் பொன் இடுவதாகவும் என, தானம் கொடுத்த செய்தியை குறிக்கிறது. மற்ற இரு கற்களும், தரையில் பாவுகற்களாக இருந்தன. இதிலிருந்து, இங்கு பெருங்கோவில் இருந்தது என்பது, உறுதியாகிறது.

பராந்தகன் வசம்: கி.பி., 950 வரை, இப்பகுதி, சோழ மன்னர் முதலாம் பராந்தகன் வசம் இருந்துள்ளது. ஆயினும், இப்பகுதியில், பிற மன்னர்கள் படையெடுக்கக் கூடும் எனக்கருதிய, பராந்தகன், தன் மகன் ராஜாதித்தனை, அரசனாக அமர்த்தியுள்ளார் என்பது, தெரிய வருகிறது. கி.பி., 950ல், ராஷ்ட்டிர கூட மன்னன் கன்னரதேவன், இப்பகுதி மீது படை எடுத்தார். அரக்கோணத்துக்கு அருகில் உள்ள தக்கோலத்தில், நடந்த கடும் யுத்தத்தில் ராஜாதித்தன் கொல்லப்பட்டார். தமிழகத்தின் வடபகுதியை, கன்னரதேவன் வெற்றி கொண்டார்.ஆற்காடு அருகே உள்ள காவேரிபாக்கத்தில், தன் படைவீட்டை நிறுவி, கிருஷ்ணேஸ்வரம், காலபிரியர், கீர்த்தி மார்த்தாண்டர் ஆகிய, மூன்று கோவில்களை எழுப்பினார். அக்கோவில்கள் இடிந்தன; அவற்றின் பல சிலைகள், சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன. அருங்குன்றத்தில் கிடைத்த சூரியனார் சிலை, மிகப்பெரியது; பேரரசனால் நிறுவப்பட்டது போல் காணப்படுகிறது. ஆதலால், கன்னரதேவனால் இக்கோவில் கட்டடப்பட்டதாகக் கருதலாம். கி.பி., 950ல், பராந்தக சோழன் இப்பகுதியை மீட்டார். இங்கு கிடைத்த கல்வெட்டு, 953ல், கன்னரதேவன் ஆட்சியில் இருந்த போது, எழுதப்பட்டது.

கல்வெட்டுகள்: இது குறித்து, தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர், நாகசாமி கூறியதாவது: இப்பகுதியில், மேலும், பல கல்வெட்டுகள் கிடைக்கலாம். டாக்டர் சந்திரசேகர், இப்பகுதியின் முன்னேற்றத்துக்காக பல பணிகளை செய்து வருகிறார். மருத்துவசாலை, படிப்பகம், சாலை அமைத்தல், பள்ளிக்கூடம் அமைத்தல் உள்ளிட்ட பல பணிகளை செய்துள்ளார். மேலும், தொல்லியல் துறையும், சுற்றுலா துறையும் இணைந்து இப்பகுதியை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !