உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேதார்நாத் கோவிலை பழமை மாறாமல் புனரமைக்க ஏற்பாடு!

கேதார்நாத் கோவிலை பழமை மாறாமல் புனரமைக்க ஏற்பாடு!

புதுடில்லி: கேதார்நாத் கோவிலை அதன் பழமை மாறாமல் புனரமைக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும், என, மத்திய கலாச்சாரத் துறை இணையமைச்சர் சந்த்ரேஷ் குமாரி கடோச் தெரிவித்துள்ளார். தொல்பொருள் ஆய்வுத்துறை இது குறித்து அவர் நேற்று கூறியதாவது: உத்தரகண்ட் மாநில பெருவெள்ளத்தால், கேதார்நாத் கோவில் பாதிக்கப்பட்டதை அறிந்ததும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் வல்லுனர்கள் குழு, கேதார்நாத் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது சீதோஷ்ண நிலை மிக மோசமாக இருந்ததால், அவர்கள் சென்ற ஹெலிகாப்டர், அங்கு தரையிறங்க முடியாமல், திரும்பி வந்து விட்டது. இன்னமும் அங்கு நிலைமை சீராகவில்லை; சரியானதும், அங்கு மத்திய குழு அனுப்பி வைக்கப்படும். பலத்த சேதமடைந்துள்ள கேதார்நாத் கோவிலை, பழமை மாறாமல் புதுப்பிக்கவும், புனரமைக்கவும், தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும். புனரமைப்பு பணிகளை, குஜராத் முதல்வர், நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப் போவதில்லை. ஏனெனில், தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் தகுதி வாய்ந்த வல்லுனர்கள் உள்ளனர்; அவர்கள், கோவிலை மிகச் சரியாக சீரமைப்பர். தனி நபர்களிடமோ, மாநில அரசுகளிடமோ ஒப்படைத்தால், அவர்கள் விருப்பப்படி மாற்றி விடுவர். தேவைப்பட்டால், வெளிநாடுகளில் இது போன்ற பாரம்பரிய கட்டடங்களை புனரமைத்தவர்களின் உதவி நாடப்படும். இவ்வாறு, அமைச்சர் கடோச் கூறினார்.

கை கொடுக்கும் "பிக்கி : உத்தரகண்ட் மாநிலத்தில் சேதமடைந்துள்ள உள்கட்டமைப்பு பணிகளை சீரமைக்க, "பிக்கி எனப்படும், இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு, சிறப்பு குழுவை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்கமிஷன் முன்னாள் உறுப்பினர் செயலர், சுதா பிள்ளை தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, வீடுகள் கட்டுதல், சுத்தமான குடிநீர் வழங்குதல், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உதவியுடன் மேற்கொள்ள உள்ளது. இது போல், பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும், உத்தரகண்ட் மாநிலத்திற்கு உதவ முன்வந்துள்ளன. "உத்தரகண்ட் சென்று உயிரிழந்தவர்களின், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.,) செட்டில்மென்டுகளை விரைவாக முடிக்க வேண்டும் என, உத்தரகண்ட் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசியல் வேண்டாம்: உத்தரகண்ட் நிவாரணப் பணிகளில், அரசியலுக்கு இடம் கொடுக்க வேண்டாம்; அத்தகைய பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கு ஊக்கம் அளிக்கும் வகைகளை, எதிர்க்கட்சியினர் உட்பட அனைத்து, அரசியல் தலைவர்களும் யோசிக்க வேண்டும், என, அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், காங்கிரஸ் பொதுச் செயலருமான அம்பிகா சோனி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஏற்கனவே, கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக, இடைவிடாது கொட்டித் தீர்த்து வரும் பருவ மழை, நேற்று மாநிலம் முழுவதும் பரவலாக பெய்தது. இதனால், கங்கை, ஷாரதா, காக்ரா நதிகள், அபாய மட்டத்தை எட்டியுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விழித்து கொண்டது விஜய் பகுகுணா அரசு : "உத்தரகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில், அடுத்த, 72 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும். நிலச்சரிவு ஏற்படும் இடங்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என, மாநில அரசு நேற்று அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், இந்த எச்சரிக்கையை, மாநில அரசு வெளியிட்டுள்ளது. கடந்த, 17ம் தேதி, அம்மாநிலத்தில் ஏற்பட்ட பேரிடர் குறித்து, வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரித்தும், அதை கண்டு கொள்ளாமல் இருந்ததாக, மாநில, காங்கிரஸ் முதல்வர், விஜய் பகுகுணா அரசு மீது கண்டனங்கள் கூறப்படுகின்றன. ஒரு லட்சம் பேரை தவிக்க வைத்த பிறகு, விழித்துக் கொண்ட விஜய் பகுகுணா அரசு, நேற்று அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், சமோலி மற்றும் குமோயான் பகுதிகளில், 70 - 90 மி.மீ., மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !