உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோவில் தீர்த்தக்குளங்கள் ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிப்பு

ஸ்ரீரங்கம் கோவில் தீர்த்தக்குளங்கள் ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிப்பு

திருச்சி: ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் தீர்த்தக்குளங்கள், 70 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடக்கின்றன. பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக வென்ற பின்னர், ஸ்ரீரங்கம் கோவிலில் பல்வேறு திருப்பணி தொடர்ந்து நடந்து வருகின்றன. ஸ்ரீரங்கம் கோவிலை பொறுத்தவரை, சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, அஸ்வ தீர்த்தக்குளம், மூலைத்தோப்பு தெப்பக்குளம், மேலூர் விருச்சி தீர்த்தம், திருவானைக்காவல் ராணி மங்கம்மா தீர்த்தம், உத்தமர்கோவில் கதம்ப தீர்த்தம், ஜீயபுரம் தீர்த்தக்குளம், கொள்ளிடம் ஆறு ஆகியன நவ தீர்த்தங்களாக கருதப்படுகின்றன. வழக்கமாக, ராப்பத்து, பத்தாம் திருநாள், வசந்த உற்சவம் நிறைவு, பவித்திர உற்சவம், சித்திரை, தை திருநாள்களில் சந்திர புஷ்கரணியில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வது வழக்கம். பங்குனி உத்திரத்தின்போது வட காவிரி எனப்படும் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருள்வார். பங்குனி மாதம் திருவானைக்காவலில் உள்ள ராணி மங்கம்மா தீர்த்தம், மாசி மாதம் உத்தமர் கோவிலில் கதம்ப தீர்த்தம், மாசி உற்சவத்தின்போது, மூலைத்தோப்பு தெப்பக்குளத்திலும், மண்டகப்படி செல்லும்போது, அஸ்வ தீர்த்தக்குளம், ஜீயபுரம் குளம், ஸ்ரீரங்கம் மேலூர் விருச்சி தீர்த்தத்தில் தீர்த்தவாரி கண்டருள்வார்.

லால்குடி அருகே தாளக்குடி உள்ளிட்ட நம்பெருமாள் மண்டகப்படி பெறும் இடத்தில் உள்ள குளம் உள்ளிட்ட பல குளங்கள் தூர்ந்து போயுள்ளன. தீர்த்தவாரி குளங்களை சீரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை நிதி வழங்கின. தூர்ந்துப் போயிருந்த சூர்ய புஷ்கரணி குளம், அஸ்த தீர்த்தக்குளம், கதம்ப தீர்த்தம், விருச்சி தீர்த்தம், ராணி மங்கம்மா தீர்த்தம் ஆகியவற்றை சீரமைக்க, 56 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. ஜீயபுரம் மண்டபம் எதிரேயுள்ள குளம், 14 லட்ச ரூபாயில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, வெள்ளைக்கோபுரம் வழியாக, கார் வந்து செல்வதற்கு வசதியாக, சேஷராயர் மண்டபத்திலிருந்து உடையவர் சன்னதி வரை, கருங்கல் பதிக்கும் பணியும், தூர்ந்துப்போன மடப்பள்ளி சாக்கடை சீரமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகின்றன. அறங்காவலர் குழுக்கூட்டத்தின் தீர்மானத்தின்படி, ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சொந்தமான, மாசி உற்சவத்தின்போது, நம்பெருமாள் தீர்த்தவாரி காணும் மூலைத்தோப்பு தெப்பக்குளம், காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் தெப்பக்குளம், உறையூர் நாச்சியார் கோவில் தெப்பக்குளம், திருவானைக்காவல் ஜம்பு தீர்த்தம் ஆகியவற்றில் விரைவில் சீரமைப்புப்பணி துவங்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !