தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா கோலாகலம்
ADDED :4521 days ago
கேளம்பாக்கம்: பொன்மார் தீப்பாஞ்சி அம்மன் கோவிலில், ஆடித் திருவிழா கோலாகலமாக நடந்தது. கேளம்பாக்கம் அடுத்து உள்ள பொன்மாரில், தீப்பாஞ்சி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில், 22ம் ஆண்டு ஆடித்திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி, தீப்பாஞ்சி அம்மன், மாரியம்மன் மற்றும் பார்வதி அம்மன் ஆகியோர் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இரவு 8:00 மணிக்கு, கலை நிகழ்ச்சி மற்றும் அம்மன் வீதிவுலா நடந்தது. முன்னதாக, கரக ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் வீடுகள் தோறும் வேப்பிலை தோரணம் கட்டி, கூழ்வார்த்து வழிபட்டனர். அனுமந்தபுரம்: அனுமந்தபுரத்தை அடுத்த, தர்காஸ் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவிலில், ஆடித் திருவிழாவை முன்னிட்டு, கரக ஊர்வலம், கூழ்வார்த்தல் நடந்தது. நேற்று, விசேஷ மலர் அலங்காரத்தில், கங்கையம்மன் அருள்பாலித்தார்.