அவிநாசியில் உருவாகும் 31 அடி உயர "மெகா விநாயகர் சிலை
அவிநாசி: அவிநாசி அருகே, திருமுருகன்பூண்டியில் உள்ள ஒரு சிற்ப தொழிற்கூடத்தில், 75 டன் எடை, 31 அடி உயரத்தில், "மெகா விநாயகர் சிலை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே, திருமுருகன்பூண்டியில், நூற்றுக்கும் மேற்பட்ட சிற்ப தொழிற்கூடங்கள் உள்ளன. இங்கு தயாராகும் சிற்பங்கள், தமிழகம், பிற மாநிலங்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இங்குள்ள சிற்ப தொழிற்கூடம் ஒன்றில் உருவாக்கப்படும் பெரிய அளவிலான விநாயகர் சிலை, திண்டுக்கல் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக, ஊத்துக்குளி அருகே, வெள்ளியம்பாளையத்தில் இருந்து, 130 டன் எடையுள்ள பெரிய பாறாங்கல், பூண்டி அருகே பச்சாம்பாளையத்துக்கு, கடந்தாண்டு, ஜூலை மாதம் கொண்டு வரப்பட்டது. 12 சிற்பிகள், ஓராண்டாக விநாயகர் சிலையை உருவாக்கி உள்ளனர். "மெகா விநாயகர் சிலை, திண்டுக்கல் கோபாலசமுத்திரத்தில் உள்ள, 108 விநாயகர் சிலைகளுடன் அமைந்த ராஜ கணபதி கோவிலில், அடுத்த மாதம், 8ம் தேதி, பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சிலையை உருவாக்கிய சிற்பிகள் கூறியதாவது: சங்கடஹர சதுர்த்தி விநாயகர் என, பெயரிடப்பட்டுள்ள இந்த சிலை, உப பீடத்துடன் சேர்த்து, 31 அடி உயரம், 15 அடி அகலம், 10 அடி கனம் கொண்டது. 130 டன் எடையுள்ள கல் கொண்டு வரப்பட்டு, தேவையற்ற பகுதிகள் நீக்கப்பட்ட பின், இப்போது, 75 டன் எடையுள்ளது. தந்தகம், மோதகம், அங்குசம், பாசம் என, நான்கு கைகளுடன், அமர்ந்த கோலத்தில், வலம்புரியாக, சிலை உருவாக்கப்பட்டு உள்ளது. சிலை உருவாக்கும் பணியை, இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.