கன்னிமார் கோவிலில் விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு
செஞ்சி : செஞ்சி கோட்டையில் கன்னிமார் கோவில் பகுதியில் நடந்த ஆய்வில் பெரிய கோவில் இருந்து அழிந்த தடயங்கள் கிடைத்துள்ளதால் விரிவான ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டை 700 ஆண்டுகள் பழமையானது. போரில் கோட்டையின் பெரும் பகுதி அழிந்ததால் மீதமுள்ளவற்றை பாதுகாப்பதில் இந்திய தொல்லியல் துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒவ்வொரு பகுதியாக சீரமைத்து வருகின்றனர். இந்த ஆண்டு ஆஞ்சநேயர் கோவிலுக்கு பின்புறம் உள்ள மராட்டியர்கள் கட்டிய செட்டி குளத்தின் படிகளையும், ராஜகிரி கோட்டை மதில் சுவரை ஒட்டி சர்க்கரை குளத்திற்கு வடகிழக்கில் உள்ள கன்னிமார் கோவிலையும் புதுப்பித்து வருகின்றனர். கன்னிமார் கோவில் கன்னிமார் கோவில்களை அகழ்வாய்வு செய்த போது இங்கு பல்வேறு பிரகாரங்களை கொண்ட பெரிய கோவிலும், கோவிலை சுற்றி மிகக்பெரிய மதில் சுவரும் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. தரைத்தளத்தை சுண்ணாம்பு காரைகளை கொண்டு அமைத்துள்ளனர். கோவிலில் உள்ள சிற்பங்களும் கன்னிமார் தெய்வங்களுடன் தொடர்புடையனவாக இல்லை. செஞ்சிகோட்டை பராமரிப்பு அலுவலர் சுரேஷ் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சரக கண்காணிப்பாளர் டாக்டர் மகேஸ்வரி அகழாய்வு நடக்கும் பகுதியை ஆய்வு செய்தார். இங்கு பெரிய கோவில் இருந்து அழிந்த ஆதாரங்களை கண்டறிந்தார். எனவே இங்கு முழுமையான அகழ்வாய்வுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இங்கு இந்திய தொல்லியல் துறையை சேர்ந்த வல்லுனர்கள் விரைவில் ஆய்வு செய்து கோவிலின் காலம், எந்த வகை கோவில், எப்படி அழிந்திருக்கும் என்ற தகவல்களை சேகரிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.