உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையான் பவித்ரோற்சவம் துவக்கம்!

திருப்பதி ஏழுமலையான் பவித்ரோற்சவம் துவக்கம்!

திருப்பதி: திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம், இன்று முதல் துவங்குகிறது. தேவஸ்தான அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள், தெரியாமல் செய்த தவறுகளுக்கு பரிகாரமாக, பல நிற பட்டு நூலிழைகளால் மாலை தயாரித்து, பெருமாளுக்கும், தாயாருக்கும் சாத்துவதே இந்த உற்சவத்தின் முக்கியத்துவம். வைஷ்ணவ சம்பிரதாயப்படி, இன்று முதல், வரும், 19ம் தேதி வரை, மூன்று நாட்கள், பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. துவக்க நாளான இன்று காலை, 7:00 மணிக்கு ஹோமம் நடத்தி, பவித்ர பிரதிஷ்டை மற்றும் திருமஞ்சனம் நடைபெறும். 18ம் தேதி மதியம், 12:00 மணியில் இருந்து, 2:00 மணிக்குள், பவித்ரம், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, உற்சவருக்கு சமர்ப்பிக்கப்படும். 19ம் தேதி, பூர்ணாஹுதி ஹோமம் நடைபெறும். பவித்ரோற்சவம் நடைபெறுவதை ஒட்டி, இந்த மூன்று நாட்களிலும், வழக்கமாக நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும், இந்த மூன்று நாட்களில், ஏழுமலையானுக்கு தோமாலை மற்றும் அர்ச்சனை ஆகியவை தனிமையில் நடைபெறும்; பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், நேற்று வரலட்சுமி விரத பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஆடி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையன்று, வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், 5:30 மணிக்குள், தாயாருக்கு அபிஷேகமும், 10:00 மணி முதல், 12:00 மணிக்குள், ஆஸ்தான மண்டபத்தில் வரலட்சுமி விரத பூஜையும் நடைபெற்றது. பின், 500 தம்பதிகள் கலந்து கொண்ட, "சமஷ்டி வரலட்சுமி விரத பூஜை நடைபெற்றது. மாலை, 5:30 மணிக்கு பத்மாவதி தாயார், தங்கத் தேர் பவனி நடைபெற்றது. திருமலைக்கு பேருந்துகள் இயக்கப்படுவதை அடுத்து, ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை, மீண்டும் அதிகரித்துள்ளது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு, நேற்று முன்தினம், 320, "டிரிப் பேருந்துகள் இயக்கப்பட்டதில், 12 ஆயிரம் பக்தர்களும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்பட்ட, 325, "டிரிப் பேருந்துகளில், 14 ஆயிரம் பக்தர்களும் பயணம் செய்துள்ளனர். வியாழன் இரவு முதல், நேற்று காலை வரை, தர்ம தரிசன பக்தர்கள், 18 மணி நேரம் காத்திருந்து, ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அதிகளவு குவியாத நிலையில், 18 மணி நேரம் அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன் என்பது, பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !