உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி கோவிலில் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வந்தால் தண்டனை

திருப்பதி கோவிலில் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வந்தால் தண்டனை

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலுக்குள், எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வருவோருக்கு, தண்டனை அளிக்கும் சிறப்பு அதிகாரம், தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையான் கோவிலில், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், மொபைல் போன், லேப்டாப், கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி, பக்தர்கள் கொண்டு வரும் எலக்ட்ரானிக் பொருட்கள், ஸ்கேனர் மூலம் கண்டுபிடிக்கப்படும் போது, தேவஸ்தான ஊழியர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையில், பிரச்னை ஏற்படுகிறது. கடந்த ஆண்டு, உளவு பார்க்கும் கேமராவுடன் வந்த, பெங்களூரைச் சேர்ந்த ஒருவரும், கேமராவுடன் வந்த, குஜராத்தை சேர்ந்த ஒருவரும் பிடிபட்டனர். அவர்களை கண்டிக்க முடிந்ததே தவிர, தண்டிக்க முடியவில்லை. இதுகுறித்து, அப்போதைய தேவஸ்தான செயல் அதிகாரியாக இருந்த சுப்ரமணியம், ஆந்திர மாநில அரசிடம், திருமலை கோவிலுக்கு எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வருபவர்களை தண்டிக்கும் அதிகாரத்தை வழங்கும்படி கோரினார். எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வரும் பக்தர்களை கடுமையான தண்டனை அளிக்கும், சிறப்பு அதிகாரத்திற்கான அரசாணைக்கு, ஆக 15 இரவு, ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இனி, திருமலை ஏழுமலையான் கோவிலில், எலக்ட்ரானிக் பொருட்களுடன் வருபவர்கள் பிடிபட்டால், அவர்களிடம் இருந்து அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்; தண்டனையின் தன்மை குறித்த தகவல், இன்னும் வெளியிடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !