தேவிபட்டினம் நவபாஷணம் நுழைவு கட்டணம் ரத்து செய்ய மனு!
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷணத்தில் பக்தர்கள் நுழைவதற்கு, ஊராட்சி சார்பில் கட்டணம் வசூல் செய்வதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரத்து செய்யக்கோரி பல அமைப்புகள் சார்பில், கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். தேவிபட்டினம் நவபாஷணத்தில், நவக்கிரகங்களை வழிபட்டால் திருமண தடை மற்றும், பரிகாரம் செய்தால் தோஷங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து நவக்கிரகங்களை வணங்கிவிட்டு தான் ராமேஸ்வரம் செல்கின்றனர். தற்போது நவபாஷணத்திற்கு செல்லும் பக்தர்களில் ஐந்து வயதிற்கு மேற்பட்டோருக்கு தலா, ஐந்து ரூபாய் வசூலிக்க, தேவிபட்டினம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதற்கு அப்பகுதி மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மக்களின் புலம்பல்: ஜெயபால் (வர்த்தக சங்க தலைவர்): பல ஆண்டுகளாக நவபாஷணத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில், தற்போது மட்டும் வசூலிப்பது, அனைத்து தரப்பு மக்களையும் அதிருப்தியடைய செய்கிறது. பூமிநாதன் (நுகர்வோர் அமைப்பு தலைவர்): ராமேஸ்வரம், திருச்செந்தூர், காசி போன்ற எந்த ஸ்தலங்களிலும் கடலில் நீராட கட்டணம் கிடையாது. ஊராட்சியில் வருமானத்திற்கு பல வழிகள் உள்ளன. இதுபோன்று நுழைவு கட்டணம் மூலம்தான், வருமானத்தை பெருக்க வேண்டும் என்பது தவறு. ஊராட்சிகளின் உதவி இயக்குனரை சந்தித்து, கட்டணம் வசூலிக்கக் கூடாது என தெரிவித்துள்ளோம்.
நடராஜன்: கட்டணம் வசூலிக்க ஏலம் விட உள்ளதை ரத்து செய்யக்கோரி, மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜாகிர்உசேன் (தேவிட்டினம் ஊராட்சி தலைவர்) கூறியதாவது: கலெக்டர் உத்தரவுப்படிதான் நுழைவு கட்டணம் வசூலிக்க ஏலம் விட உள்ளோம். ஏலம் எடுப்பவர்கள் நவபாஷணம் பகுதியை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இதற்கு குறிப்பிட்ட ஐந்து பேர் மட்டுமே, பலரை தூண்டிவிட்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒரு பிரிவினர் இதே போல் நவபாஷணத்தில் பூஜை பெயரில் நடக்கும் கட்டணத்தையும் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் கூறுகின்றனர். ஊராட்சியின் நலன் கருதிதான் நாங்கள் செயல்படுகிறோம்.கலெக்டர் உத்தரவிட்டால், ரத்து செய்துவிடுகிறோம். இதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை, என்றார்.
கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது: மாவட்ட நிர்வாகம் தான், கட்டணம் வசூலிக்க அனுமதியளித்தது. கோயிலுக்கு 90 சதவீதம் பேர், வெளியூர் பக்தர்கள் தான் வருகின்றனர். இவர்களுக்கு 5 ரூபாய் நுழைவு கட்டணம் என்பது, பெரிய தொகை கிடையாது. தேவிபட்டினம் ஊராட்சியில் நிதி, ஊழியர்கள் பற்றாக்குறையால் நவபாஷண கடற்கரையில் தேங்கியுள்ள கழிவுகளை அவ்வப்போது சுத்தம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இப்பணிகளை செய்ய, இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது, என்றார்.
அனுமதி பெறவில்லை: கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம் வசூலிக்க, அறநிலையத்துறையில் அனுமதி பெற வேண்டும். தேவிபட்டினம் ஊராட்சி சார்பில், எவ்வித அனுமதியும் பெறவில்லை என, அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.