உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

மத்தூர்: திரவுபதியம்மன் கோவிலில் நடந்த, தீமிதி திருவிழாவில், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.திருத்தணி ஒன்றியம், மத்தூர் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. 68ம் ஆண்டு தீமிதி திருவிழா, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருக்கல்யாணம்: தினமும், காலை 8:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 3:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை பள்ளிப்பட்டு பஞ்சாட்சரத்தின் மகாபாரத சொற்பொழிவு நடந்தது.13ம் தேதி உற்சவர் திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், 14ம் தேதி சுபத்திரைக் கல்யாணம் நடந்தது. 16ம் தேதி அர்ஜுனன் தபசும், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மன் வளாகத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி விரதம் இருந்து, தீமிதித்தனர். பட்டாபிஷேகம்இதில், மத்தூர், மூலமத்தூர், கொத்தூர், புச்சிரெட்டிப் பள்ளி உட்பட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இரவு, 7:30 மணிக்கு வாண வேடிக்கையுடன் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !