75 நாட்களுக்குப்பின் பயணம் துவக்கியது பழநி ரோப் கார்!
பழநி: பழநி மலைக்கோவிலில், 75 நாட்களுக்கு பின், "ரோப் கார் நேற்று இயங்க துவங்கியது. கடந்த ஜூன் 5ம் தேதி, பழநி மலைக்கோவிலில், "ரோப் கார் பழுதடைந்ததால், எட்டு பெட்டிகள் அந்தரத்தில் தொங்கின; பக்தர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ரோப் காரில், புதிய, "ஷாப்ட் பொருத்தி, பெட்டிகள், கீழே இறக்கப்பட்டன. பழுது நீக்கப்பட்ட பின், பெட்டிகளில், கற்கள் ஏற்றி, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதை,"ரோப் கார் கமிட்டி மற்றும் திருச்சி, "பெல் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை அளித்தனர். இதையடுத்து, நேற்று காலை, 8:30 மணிக்கு, சிறப்பு பூஜை நடத்திய பின், "ரோப் கார் மீண்டும் இயங்க துவங்கியது.
விபத்தில்லா பயணம்: பக்தர்கள் எதிர்பார்ப்பு: பழநி மலைக்கோயில் "ரோப்கார், 75 நாட்களுக்கு பின், நேற்று இயங்க துவங்கியது. "பராமரிப்பில் கோயில் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும், என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜூன் 5 ல், பழநி மலைக்கோயில் "ரோப்கார் பழுதால், 8 பெட்டிகள் அந்தரத்தில் தொங்கின; பின், பக்தர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப்பட்ட, புது "ஷாப்ட் பொருத்தப்பட்டு, பெட்டிகள் கீழே இறக்கப்பட்டன. பழுது நீக்கப்பட்ட பின், பெட்டிகளில் குறிப்பிட்ட அளவு எடை கற்கள் வைத்து, சோதனை ஓட்டம் நடந்தது. "ரோப்கார் கமிட்டி மற்றும் திருச்சி "பெல் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை அளித்தனர். இதையடுத்து, நேற்று காலை 8.30 மணிக்கு, பூஜைகள் நடத்தி, "ரோப்கார் இயங்க துவங்கியது. கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாசில்தார் பாலசுப்பிரமணியன், டி.எஸ்.பி. குப்புராஜ் பங்கேற்றனர்.
பக்தர்களின் எதிர்பார்ப்பு: ஆர்.பிரதீபா, திருப்பூர்: இரண்டு மாதத்திற்கு பின், "ரோப்கார் இயங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. விபத்து ஏற்படாத வகையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க கண்காணிப்பு அவசியம். பக்தர்களின் பாதுகாப்பான பயணம், உறுதிசெய்யப்பட வேண்டும்.
கே.மீனு, உடுமலைபேட்டை: பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்கும் ரோப்கார் எவ்வித கோளாறும் இன்றி, இயங்க வேண்டும். அதற்காக முருகப்பெருமானை பிரார்த்தனை செய்வோம். "ரோப் காரில் சிறு குறை கண்டறியப்பட்டாலும், உடனடியாக சரிசெய்ய வேண்டும். பக்தர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.
ஆர்.பாலுசாமி,திருச்செங்கோடு: ஏற்கனவே ஒருமுறை பழநிக்கு வந்தபோது, "ரோப் கார் இயங்காததால் ஏமாற்றம் அடைந்தோம். இதில் பயணம் செய்வதை வயதானவர்கள், குழந்தைகள் விரும்புகின்றனர். விபத்து ஏற்படாத வகையில், பராமரிப்பு பணிகள் செய்யவேண்டும்.
சி.பொன்வினோத், பூம்புகார்: சபரிமலை சென்றுவிட்டு, பழநிக்கு வந்தோம். அனுபவம் உள்ள பொறியாளர்கள் மூலம் "ரோப் கார் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில், "ரோப்கார் விபத்துக்கள் நடந்ததாக தகவல்இல்லை. மாதம் ஒரு முறை, பராமரிப்பு பணி மேற்கொள்வது அவசியம்.