ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை
இள்ளலூர்: இள்ளலூர் அமிர்தவள்ளி உடனுறை ஆதிகேசவ பெருமாள் கோவிலில், கொடிமர பிரதிஷ்டை, நேற்று கோலாகலமாக நடந்தது.திருப்போரூர் அடுத்த இள்ளலூரில் புகழ் பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலை, முன்னொரு காலத்தில், இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னர் ஒருவர் தான், போரில் வெற்றி பெற்றால், பிரயோக கரத்துடன் கூடிய எம்பெருமானை பிரதிஷ்டை செய்வதாக வேண்டி கொண்டார். அவ்வாறே போரில் வெற்றி பெற்று, இக்கோவிலை நிறுவினார் என, வரலாறாக கூறப்படுகிறது.சிறப்பு பெற்ற கோவிலை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு வரும், 16ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படஉள்ளது. இதையொட்டி, கோவிலில் பெருவிழாக்கள் நடத்துவதற்கு ஏதுவாக, 17 அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட கொடிமரம் கோவில் முகப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதிய கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நேற்று காலை, 7:00 மணிக்கு நடத்தப்பட்டது. கொடி மரத்திற்கு கலை வேலைபாடுகளுடன், 1 லட்சம் மதிப்பில் செப்பு தகடுகள் பொருத்தும் பணி துவங்கியுள்ளது.