அபிராமி அம்மன் கோயில் சன்னதி: 25 நாளில் நிறைவுபெறுமென உறுதி!
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய சன்னதி மற்றும் உட்பிரகார மண்டபத்திற்கான பணிகள் 25 நாட்களுக்குள் நிறைவுபெறுமென திருப்பணிக்குழுவினர் தெரிவித்தனர்.திண்டுக்கல்ற அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி, நடந்து வருகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய சன்னதிகள் அமைப்பதற்காக ஆயிரத்து 300 சதுர அடி நிலம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. காளகத்தீஸ்வரர், ஞானாம்பிகை, பத்மகிரீஸ்வரர், அபிராமிக்கான சன்னதிகளை கலை அம்சத்துடன் வடிவமைப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியிலிருந்து கருங்கற்கள் வரவழைக்கப்பட்டிருந்தன. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த தலைமை ஸ்தபதி ரமேஷ் தலைமையில் 52 சிற்பிகள், கருங்கற்களை தாமரை வடிவிலான பூக்களைப்போன்று மாற்றியமைத்திருந்தனர். இவற்றுடன், சன்னதிக்கான அலங்கார வடிவிலான வர்க்கக்கல் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. புதிய சன்னதிகள் மற்றும் உட்பிரகார மண்டபத்தை 25 நாட்களுக்குள் முடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருப்பணிக்குழுவினர் கூறுகையில்,""பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. 18 மாதங்களுக்குள் கோயில் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான நாள், ஆகம விதிகளின்படி குறிக்கப்படும், என்றனர்.