பாலசுப்பிரமணி கோவில் சீரமைக்கப்படுமா?
சின்னசேலம்: சின்னசேலம் அருகே பழமை வாய்ந்த பாலசுப்பிரமணி கோவிலை சீரமைக்க வேண்டும். சின்னசேலம் அருகே ராயர்பாளையத்தில் உள்ள பாலசுப்பிரமணி கோவில் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சரிவர பராமரிக்ககாததால் இடிந்து விழுந்தும், மரங்கள் வளர்ந்துள்ளது. கருவறையில் உள்ள சுவாமி சிலை, மயில் வாகனம் பாதுகாப்பின்றி உள்ளது. பக்தர்கள் சிலர் இன்றும் பூஜைகள் செய்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன் கிராம மக்கள் கோவில் இருக்கும் இடம் அருகில் வசித்தனர். பிள்ளையார், சிவன், மாரியம்மன் கோவில் களும் இருந்தன. நாளடைவில் கிராம மக்கள் சாலைகளை ஓட்டி வீடு அமைத்து வந்தனர். கோவில் அருகில் இருந்தவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து சாலையோரத்திற்கு வந்தனர். மாரியம்மன் கோவில்களில் இருந்த சிலைகளை மட்டும் கொண்டு வந்து புதிதாக கோவில் அமைத்தனர்.
ஆக்கிரமிப்பு: கோவிலுக்கு பக்தர்கள் வராததால் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர். கோவில் இடிந்த நிலையில் உள்ளதால் விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறி வருகிறது. பள்ளி குழந்தைகள் சென்று விளையாடுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. நடவடிக்கை தேவைஅறநிலையத்துறை நிதி ஒதுக்கி கோவிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.