திருச்சுழி துணைமாலையம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருச்சுழி: திருச்சுழி துணைமாலையம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடந்தது. திருச்சுழியில், ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, துணை மாலையம்மன் சமேத திருமேனி நாதர் கோயில் உள்ளது. இங்கு, 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. பிறகு, திருவண்ணாமலை ரமண ஆசிரம பக்தர்கள் சார்பில், 70 லட்சம் ரூபாய் செலவில், கோயில் கோபுரங்கள், மேல் தளங்கள் சீரமைப்பு, விமான கோபுரங்கள் புதுப்பிக்கும் பணி நடந்து முடிந்து, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான பூஜைகள் ஆக.,29ல் துவங்கின. முதல் நாள் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தன. 2 மற்றும் 3 ம் நாள் அங்குரார்பணம், யாகசாலை பிரவேசம், ஆச்சாரிய வரணம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், விசேட சந்தி நடந்தது. நேற்று அதிகாலை 4 வது கால பூஜை நடந்தது. காலை 9.50 மணியிலிருந்து 10.15 மணிக்குள் மஹாபூர்ணாகுதி, ஏககால விமானம், ராஜகோபுர பரிவார கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி- அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தங்கம்தென்னரசுஎம்.எல்.ஏ., மகேஸ்வரன், எஸ்.பி., ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார், நிர்வாக செயலர் திவான் மகேந்திரன், கோயில் அலுவலர் கணேசன் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.