அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பிரதோஷம்
திருத்தணி: அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த சிறப்பு பிரதோஷ விழாவில், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று பிரதோஷ விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மதியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாலை, 4:30 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, பிரதோஷ விழா நடந்தது. பைரவர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு பால், அபிஷேகம் நடைபெற்றன. தொடர்ந்து மிளகு வழிபாடும், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. பின்னர், வில்வ மரத்தில் காப்புக்கட்டி, பரிகாரம் செய்யப்பட்டது. இதில் பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். திருத்தணி, நாபளூர், குன்னத்தூர், லட்சுமாபுரம், தாஸ்ரெட்டி கண்டிகை, ஆற்காடுகுப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.