உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா: அக்.,2ல் குமரியில் இருந்து சுவாமி பவனி!

திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா: அக்.,2ல் குமரியில் இருந்து சுவாமி பவனி!

நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவுக்காக சுவாமி விக்ரகபவனி அக்., இரண்டாம் தேதி கன்னியாகுமாரி மாவட்டம் பத்மனாபபுரத்திலிருந்து புறப்படுகிறது. பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் சரஸ்வதிதேவி கோயில் உள்ளது. இங்குள்ள சிலை கவியரசர் கம்பர் வழிபட்டது என்று வரலாறு கூறுகிறது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் தலைநகராக பத்மனாபபுரம் விளங்கிய போது இங்கு மன்னரின் நேரடி
மேற்பார்வையில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. நாளடைவில் நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றிய பின்னரும் நவராத்திரி விழாவை மன்னர் நேரடியாக நடத்த வசதியாக யானை மீது சரஸ்வதி தேவி சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் பழமை மாறாமல், இருமாநிலங்களின் உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த நவராத்திரி பவனி நடைபெறுகிறது. கேரள போலீசார் பத்மனாபபுரம் வந்து அணி வகுப்பு மரியாதை நடத்தி கேரளாவுக்கு சுவாமி சிலைகளை கொண்டு செல்கின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் ஐந்தாம் தேதி தொடங்குகிறது. இதற்காக வரும் இரண்டாம் தேதி காலையில் சரஸ்வதி தேவி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் பவனியாக புறப்படும். இந்த பவனியில் மன்னர் பயன்படுத்திய உடைவாள் எடுத்து செல்லப்படும். இதை எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சியில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி, தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !