உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி ..!

உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி ..!

*எந்தச் செயலைச் செய்தாலும் அதனால் உண்டாகும் புண்ணியம், பாவம் இரண்டையும் கடவுளின் திருவடியில் ஒப்படைத்து விடு.
*தீயவனையும் உன் நல்லெண்ணத்தால் திருத்தி விட முடியும். கடவுளை வழி பட்டால் கெட்டவனும் மனம் திருந்தி நல்லவன் ஆவான்.
*உண்மையான பக்தனின் கண்களில் கேடு என்பதே தென்படுவதில்லை.
*நல்ல ரத்தம் ஓடும்போதே, இளமையிலேயே கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொள்.
*அன்பு மயமான உள்ளத்தில் வெறுப்புக்கு இடம் இருக்காது.
*தான் கடைபிடிக்கும் கொள்கையிலிருந்து சிறிதும் பிறழாதவனே நல்ல லட்சியவாதி.
*மனம் என்பது தூய்மையான கண்ணாடி போல் இருக்க வேண்டும். அப்படியானால் தான் உன்னையே நீ, அதில் தெளிவாக பார்த்துக் கொள்ளலாம். நீ நல்லவனாக இருந்தால் இந்த உலகமும் நல்லதாகிவிடும். நினைப்பின்படியே உலகம் நமக்கு காட்சியளிக்கிறது.
*மன சாந்தியும், தெளிவும் உண்டாக வேண்டும் என நீ விரும்பினால், நேர்மையைப் பின்பற்றி வாழ்வதே நல்லது.
*பிடிவாதத்தால் மனிதன் தனக்குத் தானே துன்பத்தை வரவழைத்துக் கொண்டு அல்லல்படுகிறான். விட்டுக்கொடுப்பவன் வாழ்வில் இனிமையைக் காண்கிறான்.
*நீ செய்த செயல்கள் பற்றி கர்வம் கொள்ளாதே. எந்த நிலையிலும் அடக்கமும், பணிவுமே உனக்கு அவசியம்.
*யாரையும் இழிவாக கருதக்கூடாது. நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள்.
*கடவுளுக்குக் கொடுக்கும் காணிக்கைகளில் தலைசிறந்தது தன்னையே கடவுளுக்கு அர்ப்பணிப்பது தான்.
*கடவுளிடம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனுக்கு உயிர் கூட ஒரு பொருட்டாக இருக்க முடியாது.
*உபதேசத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், அதன் படி நடப்பது மிகவும் கடினமானது.
*உன் மனத்தை திருத்த முயற்சி செய். உலகமும் தானே திருந்தி விடும். தீய எண்ணங்களால் மனதைக் கெடுத்துக் கொள்ளாதே.
*கடவுளிடம் உன்னை முழுமையாக ஒப்படைத்து விட்டு, நதியைப் போல தங்கு தடையின்றி ஓடிக் கொண்டிரு.
*மனப்போராட்டம் ஓய்ந்து அமைதி பெற வேண்டுமானால், பக்தி செலுத்துவது ஒன்றே வழி.
*கண்ணில் படும் அத்தனை உயிர்களையும் கடவுளின்  வடிவமாகக் காண்பதே தவம்.
*பொறுமையும், அமைதியும் உனக்கு இரு கண்களாக இருக்கட்டும்.
*தவறான வழியில் ஈட்டிய பணத்தால் எப்போதும் துன்பமே உண்டாகும். பிறரை கெடுத்து வாழ நினைப்பது பாவம்.
*ஆசை இருக்கும் வரை மனிதனுக்கு கவலை இருக்கும். ஆசையை விடுத்தால் ஆனந்தம் நிலைக்கும். பொருளைத் தேடுவதோடு அருளையும் மறவாமல் தேடிக் கொண்டிரு.
*ஒழுக்கசீலனாக வாழ்ந்தால், ஒப்பற்ற சிறப்பு ஒருவனைத் தேடி வரும். நல்ல மனிதன் இருக்குமிடம் ஒளிமயமாகவே இருக்கும்.
*தன்னைத் தானே அறிந்தவனே, செயற்கரிய செயலாற்றும் வல்லமை பெற்றிருப்பான்.
*அன்பும், பணிவும் உன் பண்புகளாகட்டும். அனைத்தும் நன்மையாகவே முடியும்.
சாந்தானந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !