மேடையில் அசத்தும் எட்டு
ஆழ்வார்திருநகரி.... திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள புனித தலம். நவதிருப்பதிகளில் ஒன்று. நம்மாழ்வார் அவதரித்த பெருமையும் பெற்றது. இங்கு வசிக்கும் எட்டு வயது சடஜித் என்ற கீதாசார்யன், நல்ல பக்தி சொற்பொழிவாளனாக இருக்கிறான் என்றால் பலராலும் நம்ப முடியாது, ஆனால், சமீபத்தில் சென்னையில் பக்தி ரசம் சொட்ட அவன் நிகழ்த்திய பஞ்ச கல்யாண உபன்யாசம் கேட்டபிறகு நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. கதை சொல்லும் பாணியும், உப கதைகளை எடுத்துவிடும் சாதுர்யமும், உபன்யாசத்திற்கு உண்டான நகைச்சுவையை கையாளும் வித்தையையும், உதாரணத்திற்கு எடுத்துச் சொல்லும் நாலாயிரதிவ்ய பிரபந்தங்களும் மலைக்க வைக்கிறது. உபன்யாசம் முடிந்ததும், மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். சடஜித்திற்கு இதெல்லாம் ஒரே இரவில் மாயாஜாலம் போல நிகழ்ந்து விடவில்லை. பின்னணியில் பெரிய பாரம்பரியமும், தந்தை ஸ்ரீராம், தாய் பத்மா, தாத்தா ஸ்ரீநிவாச பூவராஹாசாரியரின் ஆசியும், சடஜித்தின் அளவுகடந்த ஆர்வமும் இருக்கிறது. உபன்யாசம் செய்வதை பகவானின் கைங்கர்யமாக கருதும் இளையவில்லி பாரம்பரியத்தில் வந்த சிறுவனே சடஜித். சடஜித்தின் கொள்ளு தாத்தா சடகோபாசார்யர், தாத்தா ஸ்ரீநிவாச பூவராஹாசாரியர், அப்பா ஸ்ரீ ராம் என்று அனைவருமே உபன்யாசம் நிகழ்த்து பவர்கள்தான். சடஜித்தின் தந்தை ஸ்ரீராம், பெங்களூருவில் கிராபிக் டிசைனராக இருந்தார். வேலையை உதறிவிட்டு சொற்பொழிவளாராக உள்ளார். சடஜித் பற்றி ஸ்ரீராம் பேசும்போது மிகவும் பூரித்துபோகிறார், அப்பா சொல்லும் புராண கதை களையும், வார்த்தை களையும் சடஜித் தனது மழலைக்குரலில் தப்பில்லாமல் சொன்ன போது ரொம்பவே ஆச்சர்யப்பட்டு போனோம்.சேலத்தில் மூன்று மணி நேரம் உபன்யாசம் செய்ய வேண்டிவந்தது, இடையிடையே ஒரு பத்து நிமிடம் சடஜித் தனக்கு தெரிந்த புராண குட்டிக்கதைகளை சொல்ல ஆரம்பித்தான், அன்று விழுந்த கைதட்டல் மொத்தமும் அவனுக்கே. அப்போது அவனுக்கு வயது மூன்றுதான். அதன் பிறகு படிக்கும் நேரம் போக உபன்யாசத்தில் ரொம்பவே ஆர்வம் காண்பிக்க ஆரம்பித்தான், தாத்தாவிடமும், என்னிடமும் நிறைய சந்தேகங்களை கேட்பான். பத்து நிமிடம் பேச ஆரம்பித்தவன், பிறகு கொஞ்சம், கொஞ்சமாக நேரத்தை கூட்டி இப்போது ஒன்றரை மணி நேரம் உபன்யாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளான். சென்னை திருவல்லிக்கேணி நம்பிள்ளை கோயிலில் கடந்த ஆண்டு மார்கழி மாதம் முப்பது நாளும் ஆண்டாள் பாடிய திருப்பாவை தொடர் உபன்யாசம் நிகழ்த்தினான். ஏழு வயதில் இப்படி தொடர் உபன்யாசம் நிகழ்த்தியது இவன் ஒருவனாகத்தான் இருக்கமுடியும், என்று பெருமையுடன் கூறினார். சடஜித், ஆழ்வார்திருநகரி மாளவியா பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறான். அவனை செதுக்கியதில் தாயார் பத்மாவிற்கும் பெரும் பங்கு உண்டு. சடஜித் படிப்பிலும் படு சுட்டி, பேச்சு போட்டி விளையாட்டு போட்டிகளில் பல பரிசுகள் பெறும் சிறந்த மாணவன். இந்தக் குழந்தையின் அறிவு, ஞானம் உலகமெங்கும் பரவட்டும் என்பதற்காக உபன்யாசம் நிகழ்த்தும் நாட்களிலும், வெளியூர் நிகழ்விலும் கலந்து கொள்ள பள்ளி நிர்வாகம் பெருமையுடன் அனுமதி தருகிறது.
சடஜித் பெற்றோருடன் பேச: 94436 95147.