மூன்றெழுத்தில் நம் மூச்சிருக்கட்டும்!
*கடவுள் எப்போதும் உன் அருகில் இருக்கிறார். உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நம்பு. எந்த சூழ்நிலை யிலும் அவரிடம் பிரார்த்தனை செய்ய மறவாதே.
*மனிதமனம் மதம் பிடித்த யானை போன்றது. சூறைக் காற்றைப் போல விரைந்து செல்லும் இயல்புடையது. அதைக் கட்டுப்படுத்துவது எளிதான செயல் அல்ல.
*பிறர் மீது குற்றம் சுமத்தும் குணத்தை மாற்றிக் கொள். பிறர் குற்றத்தை காணத் தொடங்கினால் அதுவே உன் இயல்பாகி விடும்.
*தீயஎண்ணத்திலிருந்து மனதை திருப்பி விடு. மனிதனுக்கு வழிகாட்டுவது தூயமனமே.
*ஆசையை யாராலும் முற்றிலும் அழிக்க முடியாது. மனம் என்ற ஒன்று இருக்கும் வரை அதுவும் இருந்தே தீரும். ஆனால், மந்திரத்திற்கு கட்டுப்படும் நாகம் போல ஆசையைத் தலைதூக்காமல் செய்ய முடியும்.
*கடவுளின் திருநாமத்தைச் சொல்லச் சொல்ல காற்றில் ஆடாமல் எரிகின்ற தீபச்சுடர் போல மனம் அசையாமல் வசப்படத் தொடங்கும்.
*பெண்ணுக்கு நாணமே ஆபரணம். சுயகவுரவம் இல்லாத பெண்ணைப் பெண் என்றே கூற முடியாது.
*சாதனையோ, தவமோ, தீர்த்தயாத்திரையோ, பணம் சம்பாதிப்பதோ எதுவானாலும் இளமையிலேயே செய்வது நல்லது.
*குழந்தைப் பருவத்திலிருந்தே கடவுளை வணங்குவதற்கு பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பது நல்லது.
*துன்பம் உன்னைத் தொடர்ந்து விரட்டினாலும், கடவுளை விடாமல் பற்றிக் கொண்டிருந்தால் நிச்சயம் அவரின் அருளைப் பெற முடியும்.
*எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியுடன் இருக்கும் வகையில் உன் மனநிலையை அமைத்துக் கொள்வது அவசியம்.
*மூன்றெழுத்து மந்திரமான கடமையில் ஆர்வத்துடன் ஈடுபட்டால் கர்மத்தளையை உடைத்தெறிய முடியும். ஒரு கணப்பொழுது கூட வேலை செய்யாமல் சோம்பி இருப்பது கூடாது. கடமையைச் செய்தால் தான் நிலையான ஆனந்தத்தை பெற முடியும்.
*ஏக்கமோ, துக்கமோ எதுவென்றாலும் கடவுளிடம் சமர்ப்பித்து விடு. அழுது பிரார்த்தனை செய். உன் மடியை நிறைப்பது அவர் பொறுப்பு.
*கடவுளுக்கு அர்ப்பணிக்காமல் எதுவும் உண்ணாதே. உண்ணும் உணவைப் பொறுத்தே ஒருவனின் இயல்பு அமைகிறது.
*கடவுளின் நைவேத்யம் செய்த பிரசாதம் உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்திருக்க உதவும்.
*கடவுளிடம் அடைக்கலம் புகுந்துவிட்டால், விதி தன் கைகளாலேயே தான் எழுதிய விதியை அழித்து விடும்.
*விதிப்படி தான் உலகில் அனைத்தும் நிகழ்கின்றன என்பதில் ஐயமில்லை. ஆனால், மனிதன் தன் பணியைச் சரிவர செய்யக் கடமைப்பட்டிருக்கிறான்.
*நாள் முழுவதும் தியானத்தில் உன்னால் இருக்க முடியாது. அதனால், செய்யும் பணியை தியானம் போல ஒருமித்த மனதுடன் செய்து வா.
*கடவுள் ஒருவரே நமக்கு உண்மையான சொந்தம். அவரை நினைப்பதற்குக் கூட அவருடைய கருணை இல்லாமல் முடியாது.
*பிரார்த்தனையை ஒருநாளும் செய்ய மறவாதே. துன்பத்தில் இருந்து விடுபட அதுவே எளிய வழி. எத்தகைய இன்னலையும் வழிபாட்டால் போக்க முடியும்.
-குருமாதா