உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவர்கள் என்றும் உயர்ந்தவர்களே!

அவர்கள் என்றும் உயர்ந்தவர்களே!

மகான்கள் சொல்லியிருப்பதெல்லாம் சரிதானா! அவர்கள் உண்மையிலேயே அற்புதங்களைச் செய்தார்களா! என்றெல்லாம் பலரும் கேட்கிறார்கள். நம்மிடையே சமீபகாலத்தில் வாழ்ந்த வள்ளலார் நிகழ்த்திய அற்புதம் ஒன்றைக் கேளுங்கள். வேட்டவலம் என்ற சிற்றூர். இங்கே ஒரு ஜமீன்தார் இருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் உடல்நலமில்லாமல் ஆனது. பல மருத்துவங்களைச் செய்து பார்த்தார் ஜமீன்தார். குணமாகவில்லை! ஒருவேளை, தங்களுக்கு தீயசக்திகளின் பாதிப்பு இருக்குமோ என்ற ரீதியில், மந்திரவாதிகளை அழைத்தும் ஏதேதோ செய்து பார்த்தார். நோய் தீரவில்லை. அப்போது தான் அன்பர்கள் சிலர், வடலூரில் வள்ளலார் சுவாமி இருக்கிறார். அவரை அழைத்து வந்தால் நோய் குண மாகும் என்றார்கள். ஜமீன்தாரும் உடனடியாக ஏற்பாடு செய்தார். ஆனாலும், அவருக்கு ஒரு சந்தேகம். வருபவர் உண்மையிலேயே மகான் தானா என்று அறிய ஆவல்.அந்த ஆவலில், இரண்டு நாற்காலிகளை எடுத்துப் போட்டார். வலப்பக்கம் உள்ளநாற்காலியில் அமர்ந்தால், அவர் மகான் தான். இல்லாவிட்டால்...! என்று அவர் நினைத்திருந்த வேளையில், வள்ளலார் வந்தார். வலப்பக்க நாற்காலியில் அமர்ந்தபடியே, இப்போது நீங்கள் நினைத்தது நடந்து விட்டதா? என்று கேட்டார். ஜமீன்தாருக்கு ஆச்சரியம் கலந்த அவமானம்! வலப்பக்கம் அவர் அமர்ந்தது கூட தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். ஆனால், தன் மனதில் நினைத்தது அவருக்கு எப்படி தெரிந்தது! ஆகா...இவர் மாபெரும் மகான், என்று எண்ணியவர் தலைகுனிந்து நின்றார். பிறகு, வள்ளல் பெருமான் அந்த பெண்களுக்கு விபூதியளித்தார். மூன்றுவேளை பூசினாலே சரியாகி விடும் என்றார். அதே போல அவர்கள் சுகம் பெற்று எழுந்தனர். மகிழ்ந்த ஜமீன்தார், வள்ளலாரின் சன்மார்க்க நெறியில் தன்னை இணைத்துக் கொண்டார். மகான்கள் எப்போதும் உயர்ந்தவர்களே! சரிதானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !