திருவண்ணாமலை கோவிலில் நெய் காணிக்கை மாற்றமில்லை!
திருவண்ணாமலை: வெளிமார்க்கெட்டில் நெய் விலை ஏற்றம் கண்டாலும், திருவண்ணாமலை, தீப திருவிழாவில் காணிக்கை நெய் விலையில் மாற்றம் இல்லை என கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்தது:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா வரும் நவம்பர், 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது, நவம்பர், 17ம் தேதி அதிகாலை, 4மணிக்கு பரணி தீபமும், மாலை, 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சி மீது மஹா தீபமும் ஏற்றப்படவுள்ளது.இதற்காக, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும், தீபம் ஏற்றுவதற்காக பக்தர்களிடம் இருந்து நெய் காணிக்கை பெறுவது வழக்கம். நெய் காணிக்கை செலுத்துவதற்காக பக்தர்களிடம், ஒரு கிலோவுக்கு, 200 ரூபாயும், அரை கிலோவுக்கு,100 ரூபாய், கால் கிலோவுக்கு, 50 ரூபாய் காணிக்கை பெறப்படுகிறது.தற்போது, ஆவின் உள்ளிட்ட வெளிமார்க்கெட்டில் நெய் விலை உயர்ந்துள்ளது. ஆனாலும் தீபம் ஏற்றுவதற்காக, பக்தர்கள் செலுத்தும் நெய் காணிக்கையை, இந்த ஆண்டு கோவில் நிர்வாகம் உயர்த்தவில்லை. ஏற்கனவே செலுத்தப்படும் தொகையை மட்டுமே செலுத்தினால் போதும்.நெய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள், கோவில் நிர்வாக அலுவலகத்தில், கணிக்கையை செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம். மேலும், கோவில் நிர்வாகத்தின் வங்கி சேமிப்பு கணக்கிலோ அல்லது டி.டி.யாகவோ, அல்லது மணியார்டர் மூலமாகவோ நெய் காணிக்கை செலுத்தலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.