காலபைரவர் கோவிலுக்கு வெள்ளி சூலம் வழங்கல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ள கால பைரவர் கோவிலுக்கு, யாக கமிட்டி சார்பில், இரண்டரை அடி உயரமுள்ள, வெள்ளி சூலம் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி அடுத்த பெரிய ஏரி கோடியில், கால பைரவர் ஸ்வாமி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாம்பல் பூசணியிலும், தேங்காயிலும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவர். கோவிலில் உள்ள காலபைரவருக்கு, யாக கமிட்டி சார்பில், இரண்டரை அடி நீளமுள்ள வெள்ளி சூலம் வழங்கப்பட்டது. தலைவர் கோவிந்தராஜ், கோவில் நிர்வாக செயல் அலுவலர் ராதாமணியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், காலபைரவர் கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சேகர், யாக கமிட்டி செயலாளர் மகேந்திரன் மற்றும் ஸ்ரீதர், சக்திவேல், உதவியாளர் ராஜா, கோவில் பூசாரிகள் புகழேந்தி, ஆரோக்கியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.