அம்மனுக்கு 5 சதவிகிதம்!
கன்னியாகுமரி கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது சின்னமுட்டம் எனும் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பகவதி அம்மனை இப்பகுதி மீனவர்கள் காவல்தெய்வமாக வணங்குகிறார்கள். கடலில் பிடித்துவரும் மீன்களை இக்கோயிலில் வாசலில் வைத்தே ஏல் விற்பனை செய்கிறார்கள். கிடைக்கும் வருவாயில் ஐந்து சதவிகிதத்தை இக்கோயில் உண்டியலில் பொதுமக்கள் முன்னிலையில் செலுத்துகிறார்கள். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது மகிபாலன்பட்டி இந்த கிராமத்தில் உள்ள பூங்குன்ற நாயகி அம்மன். மான் வடிவில் அருள்பாலிக்கிறாள். இவளது கோயிலின் வலப்புறம் பழமையான பனை மரம் ஒன்று இருக்கிறது. இம்மரத்தின் முன் நின்று பொய் சொன்னால் அம்மனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று இங்கு வரும் பக்தர்கள் நம்புகிறார்கள். வழக்குகளில் இந்த அம்மன் முன் சத்தியம் செய்திடும் பழக்கம் இன்றும் நிலவுகிறது. திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள அகத்தீஸ்வரர், லோபா முத்திரை கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின்போது, பெண்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடிவிட்டு, மண்டியிட்ட நிலையிலேயே வலம் வருகிறார்கள். இப்படி வருவதை கும்பிடு பிரார்த்தனை என்றும், இதனால் வேண்டிய வரம் நிச்சயம் கிடைக்கும் என்கிறார்கள்.