புராணத்தில் வாஸ்து!
வாஸ்து இன்றைய காலத்தில் பிரபலமாக பேசப்பட்டாலும், பழங்காலத்திலேயே வாஸ்து சாஸ்திரம் இருந்துள்ளது. வாஸ்தோஸ்பதி எனும் சொல்லை ரிக் வேதத்தில் காணமுடிகிறது. இதற்கு பாதுகாப்பு, மகிழ்ச்சி, வளமை ஆகியவற்றைக் கொடுக்கக்கூடியது என்று பொருள். வேதங்களிலும் புராண இதிகாசங்களிலும் வாஸ்து சாஸ்திரத்தின் தத்துவங்கள் பற்றி பல இடங்களில் விரிவாகக் கூறப்பட்டு உள்ளது. பிருகு: அத்ரி, விஸ்வகர்மா, வசிஷ்டர், மயன், நாரதர், நக்னஜித், விசாலாட்சன், புரந்தரன், பிரம்மா, குமாரசுவாமி, நந்தீஸ்வரர், லவுனகர், பர்கர், வாசுதேவர், அநிருத்தர், சுக்கிரன், பிருஹஸ்பதி ஆகியோர் வாஸ்து தத்துவத்தினைக் கூறுவதாக உள்ளது. மேலும் வாஸ்து சாஸ்திரம் அன்றே பின்பற்றப்பட்டுள்ளதற்கு சில ஆன்மிக நிகழ்வுகள் ஆதாரமாக உள்ளன. 1.மகாபாரதத்தில் துரியோதனன் காட்ட வல்லுநர்களை அழைத்து வாரனாவதம் என்ற ஊரில் வாஸ்து சாஸ்திர அமைப்புப்படி எளிதில் தீப்பற்றக் கூடிய ஒரு மாளிகையை கட்டித் தரும்படி கூறுவதாக வருகிறது. 2. பாண்டவருக்காக பிரிக்கப்பட்ட இந்திரப் பிரஸ்தத்தை, மயனைக் கொண்டு கிருஷ்ணர் மிக நேர்த்தியாக வாஸ்துபடி அமைத்துக் கொடுத்தாராம்.
3. வடமதுரையில் உள்ள மக்களைக் காப்பாற்ற கடலுக்கு நடுவில் துவாரகா என்ற நகரத்தை மயனின் துணையோடு, வாஸ்து சாஸ்திர முறைப்படி உருவாக்கிய கிருஷ்ணர், அங்கு மக்களுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாராம்.
4. ராமாயணத்தில் பஞ்சவடி எனும் இடத்தில் ஆசிரமம் அமைக்கும்போது, இந்தக் குடிலை வாஸ்து சாஸ்திர முறைப்படி அமை என்று லட்சுமணனைப் பார்த்து ராமபிரான் கூறியதாக ராமாயணம் செப்புகிறது.