உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி விநாயகர்!

லட்சுமி விநாயகர்!

சென்னை கோயம்பேட்டிலிருந்து 8 கி.மீ. தொலைவில் வளசரவாக்கம் காமகோடி நகரில் லட்சுமி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கே விநாயகரே பிரதான தெய்வம் என்றாலும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு உரியவராக ஸ்ரீ ஆஞ்சனேயர் குடி கொண்டுள்ளார். கோயிலுக்குள் நுழைந்ததும் முதன்மையாக லட்சுமி விநாயகர் தரிசனம் அளிக்கிறார். இவருக்கு இடது புறம் உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீ ஆஞ்சனேயர், லட்சுமி துர்கை, முருகன் ஆகிய தெய்வங்களைத் தரிசிக்கலாம். உற்சவ மூர்த்திகளைக் கடந்ததும் அங்கே மூலவரான லட்சுமி துர்கை காட்சியளிக்கிறாள். அதைக் கடந்தால் வள்ளி, தெய்வானையுடன் முருகன், தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது. இவருக்கு பிரதோஷத்தன்று மிகப் பிரமாதமாக பூஜைகள் நடைபெறுகின்றன. அவரை வணங்கிவிட்டு வரும்போது நவகிரகங்கள் தரிசனம் அளிக்கின்றன. கோயிலின் மத்தியில் ஸ்ரீ ஆஞ்சனேயர் சாந்தசொரூபியாக-மங்கள் ரூபனாக-அழகிய வடிவினனாக கை கூப்பியபடி காட்சியளிக்கிறார். ஸ்ரீ ஆஞ்சனேயரை மனதில் நினைத்து இங்கே முழு தேங்காய் மட்டையைக் கட்டினால் நாற்பத்தேட்டு நாட்களுக்குள் நமது பிரச்சனைகள் பறந்தோடிவிடும்; புது வாழ்வு மலரும் என்பது ஐதீகம். தேங்காய்களைக் கட்டுவதற்கென்று கம்பு நடப்பட்டுள்ளது. தேங்காயிலும் கயிறு கட்டி விற்பனைக்கு வைத்துள்ளனர் தேங்காயைக் கட்டிவிட்டு ஒரு வாரம் கழித்து மறுபடி வந்து ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு அர்ச்சனை செய்தால் நாம் கேட்டதைக் கிடைக்க வைப்பார் ஸ்ரீ ஆஞ்சனேயர். வேலை வாய்ப்பு கிடைக்க, வெளிநாடு செல்ல, கல்யாண வரம், குழந்தை வரம் கிடைக்க இங்கு வழிபாடு செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !