உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருளை வழங்கும் ஆதிமாரியம்மன்

அருளை வழங்கும் ஆதிமாரியம்மன்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலும், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும் உள்ள ஊர் புதூர். இங்குள்ள கணபதி சேர்வை தெருவில் அமைந்துள்ளது ஆதிமாரியம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலில் அழகுறக் காட்சி தருகிறாள் ஆதிமாரியம்மன். இங்குள்ள அம்மனை தரிசித்தாலே, நம் கவலைகள் யாவும் பறந்தோடி விடும் என்கின்றனர், பக்தர்கள்! இங்கு மீனாட்சி அம்பிகை, துர்கை, ஆயிரங்கண்ணுடையாள், பாலமுருகன், ஆஞ்சநேயர், பைரவர் ஆகியோர் தனிச்சன்னதியில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர். குறிப்பாக, இங்கு பஞ்ச முகங்களுடன், காட்சி தரும் சிவபெருமானைத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம். இவரை வணங்கினால், கல்வியில் ஞானமும் மனதில் தெளிவும் நிம்மதியும் பெறலாம் என்கின்றனர். வருடத்தில், சித்திரை மாதப் பிறப்பு, ஆடி வெள்ளி, ஐப்பசி, திருக்கார்த்திகை, புரட்டாசி நவராத்திரி ஆகிய நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நவராத்திரியின்போது, பூ, பழம், காய்கறிகள் போன்ற அலங்காரங்களில் ஜொலிப்பாள் ஆதிமாரியம்மன், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், அம்மனை வணங்கித் தொழுதால், தாலி பாக்கியம் நிலைக்கும்; குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் என்று போற்றுகின்றனர், பெண்கள்! ஆதிமாரியம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வணங்கினால், வாழ்க்கை இனிதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !