நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா நாளை நிறைவு
ஆலங்குளம்: ஆலங்குளம் நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கி நாளை (16ம் தேதி) வரை நடக்கிறது. கடந்த 12ம்தேதி அன்னதானத்தோடு துவங்கிய திருவிழா மதியம் 3 மணிக்கு சிறுவர், சிறுமியர் பங்கு பெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி, 13ம்தேதி மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சந்தன முழுகாப்பு அலங்காரத்துடன் 1503 திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று (14ம் தேதி) மாலை கணபதி ஹோமம், குற்றாலத்திலிருந்து புனிதநீர் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று (15ம் தேதி) காலை 10 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு சிறப்பு உச்சிகால பூஜை, மதியம் 2 மணிக்கு சாமியாடிகள் மஞ்சள் நீராடுதல், இரவு 7 மணிக்கு முளைபாரி ஆயிரம் கண்பானை எடுத்தல், இரவு 12 மணிக்கு உச்சிகால பூஜை, நள்ளிரவு 1 மணிக்கு செண்டா, தாரைதப்பட்டை, கரக ஆட்டத்துடன் அம்மன் சப்பரத்தில் வீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (16ம் தேதி) காலை 10 மணிக்கு பொங்கலிடுதல், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு உச்சிகால பூஜை, மஞ்சள் நீராடுதல் மற்றும் முளைபாரி கும்மிபாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்தா செல்வம் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.