உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை நடை திறந்தது: புதிய மேல்சாந்தி தேர்வு!

சபரிமலை நடை திறந்தது: புதிய மேல்சாந்தி தேர்வு!

சபரிமலை: ஐப்பசி மாத பூஜைக்காக, சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. இன்று காலை, உஷபூஜைக்கு பின், அடுத்த ஓராண்டிற்கான மேல்சாந்தி தேர்வு நடைபெறுகிறது. சபரிமலையில், நேற்று மாலை 5.30 க்கு, தந்திரி கண்டரரு மகேஷ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி தாமோதரன் போற்றி கோயில் நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து ஆழிகுண்டத்தில் தீ வளர்க்கப்பட்டது. வேறு எந்த பூஜையும் நடக்கவில்லை. இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி, நடை மூடப்பட்டது, இன்று காலை நடை திறக்கப்பட்டதும், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷபூஜை நடக்கிறது. அதன்பின், நேற்று மாலை திறந்த நடை, அக்., 21 ல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். எல்லா நாட்களிலும் படிபூஜை நடைபெறுகிறது. அடுத்து, சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக, வரும் நவ.,1 ல் மீண்டும் நடை திறக்கப்படும். நேற்று சபரிமலையில் சாரல் மழை பெய்தது. நடை திறந்தபோது சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

புதிய மேல்சாந்தி தேர்வு: சபரிமலை ஐயப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தி இன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார். இன்று நடைபெற்ற தேர்வில் கார்த்திகை முதல் தேதியிலிருந்து அடுத்த ஓராண்டுக்கால மேல்சாந்தியாக எர்ணாகுளம் கோதமண்டலத்தை சேர்ந்த டி.என்.நாராயணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாளிகைப்புரம் மேல்சாந்தியாக மணப்புரத்தைச் சேர்ந்த பி.எம்.மனோஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !