திருவனந்தபுரம் எழுந்தருளிய சுவாமி விக்ரகங்கள் குமரி திரும்பின!
களியக்காவிளை: நவராத்திரி பூஜைக்கு திருவனந்தபுரம் எழுந்தருளிய சுவாமி விக்ரகங்கள் நேற்று (17ம் தேதி) குமரிக்கு திரும்பின. நவராத்திரி பூஜையை ஒட்டி திருவனந்தபுரம் எழுந்தருளிய சுவாமி விக்ரகங்கள் அங்கு பூஜைக்கு வைக்கப்பட்டன. தொடர்ந்து, ஒன்பது நாட்கள் பூஜைகள் முடிவடைந்த நிலையில் பத்மனாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன்,வேளிமலை முருகன், சுசீந்திரம் முன் உதிந்த நங்கை சுவாமி விக்ரகங்கள் நேற்று முன்தினம் காலை திருவனந்தபுரத்தில் இருந்து குமரிக்கு திரும்பின. அங்கிருந்து கரமனை வழியாக நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயிலில் தங்கியது. நேற்று அங்கிருந்து புறப்பட்டு அமரவிளை வழியாக குமரி மாவட்டம் வந்தடைந்தது. குமரி மாவட்ட எல்லை களியக்காவிளையில் கேரள அரசு அதிகாரிகள் சுவாமி விக்ரகங்களை முறைப்படி தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து திரும்பி படந்தாலுமூடு வழியாக குழித்துறை மகாதேவர் கோயிலில் தங்கியது. இன்று அங்கிருந்து புறப்பட்டு மார்த்தாண்டம், சாங்கை, சுவாமியார்மடம், தக்கலை வழியாக பத்மனாபபுரம் கோயில் சென்றடைகிறது.