உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவழிபாட்டில் பிரதட்சணம் என்றால் என்ன?

இறைவழிபாட்டில் பிரதட்சணம் என்றால் என்ன?

ஆலயத்தில் இறைவனை வணங்கிய பிறகு, கர்ப்ப கிரகத்தை (மூலஸ்தானத்தை) சுற்றி வலம் வருகிறோம். இதற்கு பிரதட்சணம் செய்தல் என்று பெயர். ஏன் நாம் பிரதட்சணம் செய்கிறோம்? மையப் புள்ளியின்றி ஒரு வட்டத்தை வரையமுடியாது. இறைவன்தான் நம்முடைய வாழ்வின் மையம்; மற்றும் சாரமும் அவனே! நம் வாழ்வின் ஆதாரமும் லட்சியமும் இறைவனே என்பதை நினைவில் கொண்டு, நாம் நமது அன்றாடக் கடமைகளைச் செய்து வருகிறோம். இதுவே, ஆலயத்தில் நாம் பிரதட்சணம் செய்வதன் உட்பொருள். ஒரு வட்டத்திலுள்ள எந்த ஒரு புள்ளியும் வட்டத்தின் மையப் புள்ளியிலிருந்து சமதூரத்தில்தான் உள்ளது. இது போன்றே, நாம் அனைவரும் எத்தகையவராக இருப்பினும், எங்கு இருப்பினும் இறைவனுக்கு நெருங்கியவர்கள் என்பதை உணர வேண்டும். இறைவனின் ஆசி நம் அனைவருக்கும் பாரபட்சமின்றி அளிக்கப்படுகிறது.

பிரதட்சணத்தை ஏன் இடமிருந்து வலமாக செய்கிறோம்?

போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருக்கும் என்பதற்காக இந்த வழக்கம் ஏற்பட்டது போல் தோன்றலாம். அப்படியல்ல. நாம் பிரதட்சணம் செய்யும்போது, இறைவன் எப்போதும் நமக்கு வலப்பக்கமாகவே இருக்கிறான். இந்தியாவில் வலப்பக்கம் என்பது மங்கலத்தைக் குறிப்பது! வலது காலை எடுத்து வைத்து வா! என்பர். எதையும் கொடுக்கும் போதும், வாங்கும்போதும் இடது கையால் செய்யாமல் வலது கையால் கொடுப்பதும், வாங்குவதும் மங்கலகரமானது என்பது நம்பிக்கை. ஆங்கிலத்தில்கூட வலதுபக்கத்தை (ரைட் சைடு) - அதாவது, சரியான பக்கம் என்றே குறிக்கின்றனர். எனவே இறைவனது கர்ப்ப கிரகத்தை சுற்றி வருகையில் நமக்கு என்றும் உறுதுணையாகவும், அனைத்து சக்தியை அளிப்பவனாகவும் விளங்கும் இறைவனை நமக்கு வழிகாட்டியாக - நமது வலது கையாக - நம்மை தர்ம வழியில் நடத்திச் செல்லும் துணைவனாக மனதில் நிறுத்தி, என்றும் நேர்வழியில் வாழ வேண்டும் என்பதை நமக்கு நாமே நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய நினைப்பின் மூலம் நமது தவறான இயல்புகளை வெற்றி கொள்கிறோம். முன்பு செய்த தவறுகளை மறுபடியும் செய்யாமல் தவிர்த்து விடுகிறோம்.

நமது வேத நூல்கள் மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ என்று வலியுறுத்துகின்றன. இவற்றின் பொருள், நீங்கள் பெற்றோர்களையும், ஆசிரியரையும் இறைவனுக்குச் சமமாகக் கருதுவீர்களாக என்பதாகும். எனவே நாம், பெற்றோர்களையும் தெய்வத்தன்மை உடையவர்களையும் பிரதட்சணம் செய்கிறோம். முழு முதற் கடவுளான கணேசன் தன் பெற்றோர்களை வலம் வந்து நமஸ்கரித்த கதை எல்லோரும் அறிந்த ஒன்று. இறைவனை வழிபட்ட பிறகு, நாம் நம்மையே ஒருமுறை பிரதட்சணம் செய்வது பொதுவான வழக்கம். இவ்வாறு செய்கையில் நம்முன்னே உறையும் எல்லாம் வல்ல இறைவனை மனதில் கொள்கிறோம். நம் உள்ளே ஒளிவிடும் அந்த இறைவனைத்தான் விக்ரக ரூபமாக வெளியில் வைத்து வணங்குகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !