உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிகப்பெரிய சிவலிங்கமான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்!

மிகப்பெரிய சிவலிங்கமான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்!

காட்டுமன்னார்கோவில்: உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கமான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கங்கைகொண்ட சோழபுரம். 11 ம் நூற்றாண்டு முதல், 14ம் நூற்றாண்டு வரை சோழ பேரரசின் தலைநகராக விளங்கிய இப்பகுதியில் தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன், தனது ஆட்சி காலத்தில் தஞ்சாவூர் பெரிய கோயில் வடிவமைப்புடன் கூடிய, பிரகதீஸ்வரர் கோவிலை கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டினார்.

இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட, சிவலிங்கம், உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என போற்றி வணங்கப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கருவறை சுவரில் பதிக்கப்பட்டுள்ள சந்திரகாந்த கல், வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், மழை மற்றும் குளிர் காலத்தில் இதமான வெப்பத்தையும் வெளியிட்டு கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா., சபையின், "யுனெஸ்கோ அமைப்பால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், தொன்றுதொட்டு ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது.  ஒவ்வொறு ஆண்டுள் கும்பகோணம் சங்கரமடம் மற்றும் அன்னதான கமிட்டி சார்பில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட, 100 மூட்டை அரிசியை கொண்டு, கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் சாதம் வடிக்கப்பட்டது. காலை, 10:00 மணிக்கு துவங்கி, பிரமாண்டமான பாய்லர்களில் வடிக்கப்பட்ட சாதம் முழுவதும், பிரகதீஸ்வரருக்கு சாத்தப்பட்டது. மாலை, 4:00 மணி வரை நடந்த அன்னாபிஷேகத்தை தொடர்ந்து, சுவாமிக்கு மலர் மற்றும் பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை செய்யப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அண்ணாபிஷேகத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !