திருகார்த்திகைக்கு 10 லட்சம் விளக்குகள் திண்டுக்கலில் தயாரிப்பு!
திண்டுக்கல்: திருகார்த்திகை பண்டிகைக்கு, 10 லட்சம் விளக்குகள் தயாரிக்கும் பணி திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்துவருகிறது. கேரளாவிற்கு மட்டும் 3 லட்சம் விளக்குகளுக்கு ஆர்டர் பெறப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி, நல்லாம்பட்டி பகுதியில் 60 க்கும் மேற்பட்டோர் களிமண்ணில் அகல்விளக்கு, உருளி, ஜாடி ஆகிய பொருட்களை தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவுக்கும் அனுப்பப்படுகிறது. விநாயகர், லெட்சுமி, இலை, மண்டபம், குத்துவிளக்கு, அடுக்கு, ரங்கோலி உள்ளிட்ட 50 வடிவங்களில் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இவை ஒரு ரூபாய் முதல் ரூ.150 வரை விற்கப்படுகின்றன. நவ.,17 திருகார்த்திகை என்பதால், விளக்குகளுக்கு, ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. இதனால், இரவு, பகல் பாராமல் விளக்கு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. விற்பனையாளர் கஜேந்திரன் கூறுகையில், திருகார்த்திகைக்காக, கேரளாவுக்கு மட்டும் இரண்டு லட்சம் விளக்குகளுக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. இன்னும் ஒரு லட்சம் வரை ஆர்டர் கிடைக்கும். தமிழகத்தில் பிற மாவட்ட வியாபாரிகளிடம் இருந்தும், ஆர்டர்கள் வந்துள்ளன. திருகார்த்திகைக்கு மட்டும் 10 லட்சம் விளக்குகள் வரை விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது, என்றார்.