அர்த்தநாரீஸ்வரர் கோவில்கிரிவலம்: பக்தர் வழிபாடு
திருச்செங்கோடு: அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இக்கோவில், வரலாற்று சிறப்பும், இதிகாச பெருமையும், புராண சிறப்பும், ஸ்தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகிய சிறப்புகளையும் கொண்டது. இங்கு, அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் ஸ்வாமி ஆகியோர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மலைக்கோவிலில், ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து ஸ்வாமியை வழிபட்டுச் செல்வர்.கிரிவலப்பாதை, ஆறு கி.மீ., தூரம் கொண்டது. அவ்வாறு செல்லும் பக்தர்கள், ஆறுமுக ஸ்வாமி திருக்கோவிலில் துவங்கி, பெரிய ஓங்காளியம்மன் கோவில், நாமக்கல் சாலை, மலைசுத்தி சாலை, வாலரைகேட், வேலூர் சாலை, சின்ன ஓங்காளியம்மன் கோவில், தெற்கு ரதவீதி வழியாக மீண்டும் ஆறுமுக ஸ்வாமி கோவிலை அடைகின்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு, பல்வேறு அமைப்புகள் சார்பில், வழிநெடுகிலும், சுக்கு காபி, பழங்கள், ஜூஸ், பொங்கல், கலவை சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.