புரட்டாசி சனிக்கிழமை விரதம்!
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் சர்க்கரைப் பொங்கலிட்டு மாவு விளக்கேற்றி விரதமிருந்து பூஜைகளைச் செய்வது வழக்கம். புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை அல்லது மூன்றாவது சனிக்கிழமை அல்லது ஐந்தாவது சனிக்கிழமை இவற்றில் ஏதாவது ஒரு சனிக் கிழமையில் இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். பொதுவாக திருமலையில் பகவானின் நவராத்திரி உத்ஸவம் நடக்கும் போது, புரட்டாசி சனிக்கிழமை விரதம் அனுஷ்டிக்கக் கூடாது என்றும், மற்ற சனிக் கிழமைகளில் ஏதாவது ஒன்றில் விரதம் அனுஷ்டிக்கலாம் என்று கூறுவர். விரதம் அனுஷ்டிப் போர் அவரவர் வழக்கப்படி அரிசி மாவு, வெல்லம், சர்க்கரை இவற்றைக் கலந்து மாவில் இளநீர் விட்டுப் பிசைந்து மாவில் ஒரு பகுதியை தீபம் போல செய்து, அந்த தீபத்தில் சுத்தமான நெய்விட்டு, பஞ்சுத் திரியை விட்டு விளக்கேற்றுவர். புரட்டாசி சனிக் கிழமைகளில் அந்த தீபத்தில் எம்பெருமானை ஆவாஹணம் செய்து பூஜை செய்வதும் வழக்கம். அன்று சர்க்கரைப் பொங்கலிட்டு அனைவருக்கும் விநியோகிப்பது உத்தமம்.