பேர்போற்றும் பிள்ளை!
பூமித்தாய் பெற்றெடுத்த பிள்ளை பேர் போற்றும் பிள்ளையாக வேண்டுமானால் முதலில் நாம் தாய், தந்தையை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவேதான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். நம் மனதில் தாய், தந்தையை நிலைநிறுத்திவிட்டால் அனைத்து பாதைகளிலும் வெற்றி மட்டுமே. சிறு வயதாக இருக்கும்போது நம் மீது சிறு தூசி, துரும்பு பட்டுவிட்டால் கூட மனம் கலங்கும் பெற்றோரின் மனம் கலங்க விடுவது நியாயமா? வளரும் பருவத்தில் நமக்கு எது தேவை, எது தேவையில்லை என தீர்மானித்து செய்து கொடுப்பது பெற்றோரின் மேன்மை நிலை. அவர்களை நாம் மேன்மையோடு பார்க்க வேண்டாமா? பள்ளிப் பருவத்தில் நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என நினைக்கும் போது கல்விக் கட்டணங்களை செலுத்த அவர்கள் படும்பாடு அவர்களுடைய சீரீய கடமையை எடுத்துக் காட்டுகிறது அல்லவா! பிற்காலத்தில் அவர்களுக்கு நாம் நன்றிக் கடன்பட வேண்டாமா? பள்ளிப் படிப்பு முடிந்து பணி செல்லும் வேளையில் தாய், தந்தையரின் பிணிதீர்க்க வேண்டாமா? காலமெல்லாம் நமது நலனையே கருத்தில் கொண்டு வாழ்ந்து வரும் பெற்றோர்களை நமது திருமணத்திற்கு பின்னர் அவர்களின் நலனை நினைத்து வாழ வேண்டாமா? இப்படி தாய், தந்தையரை நினைத்து எண்ணற்ற கேள்விகளை நமக்குள்ளேயே கேட்டு அதற்கு பதில்களை கண்டுபிடித்து பெற்றோர்களை நல்முறையில் எந்தப் பிள்ளை கவனித்து வருகிறதோ, அந்தப் பிள்ளையே பேர்போற்றும் பிள்ளை.