உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!

நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!

*மனிதன் தன்னந்தனியாக இருக்க முடியாது. கடவுளின் தொடர்போடு தான் அவன் தனது வாழ்வை நடத்த முடியும். மனிதன் தன்னுயிரைப் போல பிற உயிர்களையும் நேசிக்க வேண்டும். தனக்கென மட்டும் வாழாமல் மற்றவருக்காகவும் வாழ வேண்டும். இந்த அன்பு மனம் கொண்டிருப்பதே பகுத்தறிவின் பயன்.
*விலங்குக்கும், தெய்வத்திற் கும் இடைப்பட்ட நிலையில் மனிதன் இருக்கிறான். அதனால், அன்பு, இரக்கம் போன்ற நற்குணங்களும், கபடம், பொறாமை போன்ற தீய குணங்களும் அவன் மனதில் கலந்திருக்கின்றன. அன்புள்ள மனதில் மட்டுமே ஆண்டவன் மகிழ்வுடன் குடியிருப்பான்.
*ஒருநாளைக்கு நான்கு மணி நேரமாவது உறங்க வேண்டும். இரவு தூங்காமல் விழித்திருந்தால் உடல்நலம் பாதிக்கும். உண்ண வேண்டிய நேரத்தில் உண்ணவும், உறங்கவேண்டிய நேரத்தில் உறங்கவும் வேண்டும்.
*மனிதன் வாழ்வில் ஏற்க வேண்டியதை ஏற்கவும், விலக்க வேண்டியதை விலக்கவும் முடியும். நல்ல மனம் இருந்தால், இதைச் சரியாகச் செய்து, நாடு போற்ற வாழ முடியும்.
*செல்வத்தை எளிதாகச் சேர்க்கலாம். ஆனால், அருட்செல்வத்தை வாழ்வில் பெறுதல் அவ்வளவு எளிதன்று. பணம் நம்மை விட்டு ஒருநாள் நீங்கி விடும். ஆனால், அருட்செல்வம் எந்நாளும் நம்மை விட்டு நீங்காது.
*மனதில் எழும் ஆசைக்கு அளவில்லை. அதனால், செய்யக்கூடாத தீயவழிகளில் சிக்கி மனிதவாழ்வு நாசமாகிறது.
*வாழ்வில் இருவிதம் உண்டு. ஒன்று உடல்வாழ்வு, மற்றொன்று உயிர்வாழ்வு. உடல்வாழ்வு உலகியலுக்காக வாழ்வது. உடல்வாழ்வு கடவுளுக்காக வாழ்வது.
*உணவும், உணர்வும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. அழகுடன் இருக்க விரும்புபவர்கள் உணவில் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
*மனித உடல் இயற்கை அளித்த கோயில். உடலில் அழகு தெய்வம் குடியிருக்கிறது. அதனால், உடலைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
*அழகு என்பது வெறும் புறத்தோலிலும், நிறத்திலும் இருப்பதில்லை. நோய் நொடி இல்லாத உடலில் தான் அழகு தெய்வம் குடியிருக்கும்.
*ஒழுக்கத்தை உயிருக்கும் மேலாக மதியுங்கள். அதுவே மனிதனுக்கு சிறப்பு தருவதாகும். நல்லொழுக்கம் கொண்ட மனிதனின் அழகு அனைவரையும் கவர்ந்து விடும்.
*மனிதன் இயற்கையைச் சார்ந்து வாழ வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள இயற்கையான மலை, காடு, நதி போன்றவற்றை நேசித்து வாழ வேண்டும்.
*ஒழுக்கம் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல. எண்ணம், சொல், செயல் எல்லாவற்றிலும் ஒழுங்கு இருக்கவேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்தைப் பின்பற்றினால் வீடு மட்டுமல்ல, நாடே நலம் பெறும்.
*எல்லாச் சமயங்களும் கூறும் உண்மை ஒன்றே. இதை உணராமல் மக்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் பகையுணர்வு கொள்கின்றனர்.
-திரு.வி.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !