காளஹஸ்தி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை!
காளஹஸ்தி: காளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள பழைய கொடிமரத்திற்குப் பதிலாக, புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள சிவன் கோவில், 500 ஆண்டு பழமையானது. இந்தக் கோவிலில், 1912, ஏப்ரல், 21ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த, ராமநாதன் செட்டியார் என்பவர் கொடி மரத்தை பிரதிஷ்டை செய்தார். நூறு ஆண்டுகளைக் கடந்த நிலையில், கொடிமரம், வலுவிழந்து இருப்பதால், புதிய கொடி மரத்தை பிரதிஷ்டை செய்ய, ஐந்து ஆண்டுக்கு முன், கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதற்காக, திருப்பதியைச் சேர்ந்த மர வியாபாரி நாகிரெட்டி, காளஹஸ்தி கோவில் ஊழியர் சந்திரசேகர் சாஸ்திரி மற்றும் உள்ளூரைச் சேர்ந்த, வன அதிகாரி ஒருவர் ஆகியோர் இணைந்து, 100 அடி நீளமுள்ள தேக்கு மரத்தைத் தேடினர். ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டம், பத்ராசலத்தில், சிந்தலூர் வனப் பகுதியில், 100 அடி நீளமுள்ள ஒரு தேக்கு மரத்தை தேர்வு செய்தனர். அதன் வலிமை குறித்த பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த, 2010ல், அப்போதைய வனத்துறை அமைச்சர் செட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி உதவியுடன், அந்த தேக்கு மரம் மிகுந்த சிரமத்திற்கிடையில், காளஹஸ்திக்கு கொண்டு வரப்பட்டது. புதிய கொடி மரத்திற்கு, 5 கோடி ரூபாய் செலவில் தங்கத் தகடு பொருத்த, கர்நாடக முன்னாள் அமைச்சர், காலி ஜனார்தன ரெட்டி ஒப்புக் கொண்டார். ஆனால், ஊழல் வழக்கில், அவர் சிறைக்கு சென்றதால், தங்கத் தகடு பொருத்தும் பணி தடைபட்டது. சில தினங்களுக்கு முன், புதிய கொடிமரத்திற்கு, 5 லட் சம் ரூபாய் செலவில், செப்பு தகடு பொருத்தும் பணியை முடித்து, நேற்று முன்தினம் காலை, 11:30 மணியளவில், மூலவர் சன்னிதிக்கு எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தப் புதிய கொடிமரம், ஆறு அடி சுற்றளவு; 62 அடி உயரம் கொண்டது.