உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேதார்நாத் கோவிலை காக்க புது திட்டம்: தொல்பொருள் ஆய்வு துறை அறிவுரை!

கேதார்நாத் கோவிலை காக்க புது திட்டம்: தொல்பொருள் ஆய்வு துறை அறிவுரை!

டேராடூன்: வரும் காலங்களில், வெள்ளப் பெருக்கிலிருந்து, கேதார்நாத் சிவன் கோவிலை காப்பாற்ற வேண்டுமானால், நடுவே ஓடும், மந்தாகினி ஆற்றின் வழியை மாற்றியமைக்க வேண்டும் என, தொல்பொருள் ஆய்வுத் துறை வலியுறுத்தியுள்ளது.

ஜூனில் கடும் பாதிப்பு: ஜூன், 15 - 17ம் தேதிகளில், உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம், கேதார்நாத் சிவன் கோவில் உட்பட பல இடங்களில், வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியது. தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்ட, எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும், கேதார்நாத் கோவிலின் உள் புகுந்த வெள்ளம், கோவிலை பாழ்படுத்தியது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, கடந்த மாதம் தான், அந்த கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறத் துவங்கின.

ஆற்றின் நடுவே கோவில்
: வெள்ளத்தால் சேதமடைந்த கோவிலை, புனரமைக்கும் பொறுப்பு, மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. கேதார்நாத் கோவில், மந்தாகினி ஆற்றின் நடுவே அமைந்துள்ளது. சுற்றிலும் உயர்ந்த பனிமலைகளில், ஏராளமான காட்டாற்றுகள் உள்ளன. இந்த ஆறுகளில், வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, எளிதில் பாதிக்கப்படும் வகையிலேயே, ஆற்றின் நீரோட்ட உயரத்திற்கு இணையாக, கோவில் அமைந்துள்ளது. இதனால், வருங்காலங்களிலும், வெள்ளப் பெருக்கால் கோவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனக் கூறும், தொல்பொருள் ஆய்வுத்துறையினர், மந்தாகினி ஆற்றின் போக்கை மாற்றியமைக்க வேண்டும் என, கூறியுள்ளனர். கோவிலை அந்த இடத்திலிருந்து அகற்ற முடியாது என்பதால், ஆற்றின் வழியை மாற்றியமைக்கலாம் என்ற யோசனையை பரிசீலிப்பதாக, மாநில, கலாசாரத் துறை அமைச்சர், சந்தரேஷ் குமாரி கடோச் கூறியுள்ளார்.

பக்தர்கள் வணங்கும் பாறை: இதற்கிடையே, வெள்ளப் பெருக்கின் போது, வெள்ள நீரில் கோவில் அடித்துச் செல்லப்படாமல் காப்பாற்றும் வகையில், பெரிய பாறை ஒன்று, கோவிலின் பின்பகுதியில், முட்டு கொடுத்தது போல் வந்து சேர்ந்துள்ளது. அதை, இப்போதைக்கு அகற்றப் போவதில்லை எனவும், அமைச்சர் கூறியுள்ளார். அந்தப் பாறையை, பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !