திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாயாகசாலை பூஜையுடன் துவங்கியது!
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா, யாகசாலை பூஜையுடன் துவங்கியது. பக்தர்கள் பச்சை ஆடை உடுத்தி, விரதத்தை துவக்கினர். திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நேற்று துவங்கியது. இதையொட்டி, அதிகாலை, 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:30க்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, அபிஷேகமும், பூஜைகளும் நடந்தன. காலை, 9:30 மணிக்கு, பூர்ணாஹுதியுடன் யாகசாலை பூஜை துவங்கியது. பின், ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில், திருவாவடுதுறை மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின், தங்க சப்பரத்தில் கிரிவீதி உலா நடந்தது. அதன் பின், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள், கடலிலும், நாழி கிணற்றிலும் நீராடி, பச்சை ஆடை உடுத்தி, சஷ்டி விரதத்தை துவக்கினர். வரும், 8ம் தேதி சூரசம்ஹாரம் விழா நடக்கிறது.